பந்தலுார்: நீலகிரியை ஒட்டிய கேரளா மாநிலம் மலப்புரம், வயநாடு பகுதிகளில், நக்சல்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

வயநாடு பகுதியில், 2020 நவ., 3ல் நக்சல் வேல்முருகன் சுட்டுக் கொல்லப்பட்டார்; 5 பேர் துப்பாக்கி காயங்களுடன் தப்பினர். தொடர்ந்து கட்டுக்குள் இருந்த நடமாட்டம் மீண்டும் தென்பட துவங்கியுள்ளது. வயநாடு மாவட்டம், மானந்தவாடி அருகே, தொண்டர்நாடு கிராமத்தை ஒட்டிய பகுதிகளில், நக்சல்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
அதில், '2019ல் மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியின கிராமங்களில், அரசு, இதுவரை பணிகள் மேற்கொள்ளவில்லை. பழங்குடியின மக்களுக்கு நிலம் வழங்காத கம்யூ., தலைமையிலான அரசை புறக்கணிக்க வேண்டும்' என்பன உட்பட வாசகங்கள் எழுதப்பட்டு, சி.பி.ஐ., (மாவோயிஸ்ட்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, வயநாடு பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.