இந்தியன் ஆயில் நிறுவன கிடங்கு அதிகாரிகளை கண்டித்து, டேங்கர் லாரிகளை நிறுத்தி, டிரைவர்கள், கிளீனர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
சங்ககிரி, நாரப்பன்
சாவடியில், இந்தியன் ஆயில் நிறுவன கிடங்கு உள்ளது. அங்கிருந்து சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விற்பனை நிலையங்களுக்கு, சங்கங்கள், தனியார் சார்பில் தினமும், 400க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், விமான எரிபொருள் ஆகியவை எடுத்துச்செல்லப்படுகிறது.
சில நாளாக, நிறுவனத்தில் எரிபொருள் நிரப்பும் பிரிவில் உள்ள அதிகாரிகள், வழக்கத்தை விட டிரைவர், கிளீனர் களிடம் சான்றிதழ் கேட்டனர்.
அத்துடன், எரிபொருள் நிரப்புவதில் ஒரு மணி நேரத்துக்கு மேல் தாமதம் செய்வதால், டிரைவர்கள் குறிப்பிட நேரத்துக்கு, விற்பனை நிலையங்களுக்கு எடுத்துச்செல்ல இயலாத சூழல் ஏற்பட்டது.
இதனால் டேங்கர் லாரி டிரைவர்கள், கிளீனர்கள் சங்கத்தலைவர் தேவராஜன் தலைமையில், டேங்கர் லாரிகளை, நிறுவன வளாகத்தில் நிறுத்திவைத்து, இந்தியன் ஆயில் நிறுவன கிடங்கின் முன் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிறுவன அதிகாரிகள் பேச்சு நடத்தி சமாதானப்படுத்திய பின், 3 மணி நேரம் கழித்து, டிரைவர்கள், கிளீனர்கள், எரிபொருள் நிரப்ப, வண்டியை கிடங்குக்கு ஓட்டிச்சென்றனர்.
Advertisement