இடைநின்ற மாணவர்கள்
மீண்டும் பள்ளியில் சேர்ப்பு
சேந்தமங்கலம், செப். 25-
சேந்தமங்கலம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும், குடியிருப்புகளிலும், பள்ளி செல்லாமல் இடையில் நின்ற மாணவ, மாணவிகளை கண்டறிந்து, பள்ளியில் மீண்டும் சேர்க்கும் பணி தற்போது நடக்கிறது.
சேந்தமங்கலம் அடுத்த பள்ளிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் செல்வகுமார், பள்ளியின் ஆசிரியர் பயிற்றுனர் கோகிலா ஆகியோர், பள்ளியில், 8ம் வகுப்பு முடித்து, 9ம் வகுப்பு செல்லாமல் கடந்த மூன்று மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்த மாணவன் சுவிந்திரனை கண்டறிந்து, அவருக்கு அறிவுரைகள் வழங்கி, பேளுக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வனிடம் ஒப்படைத்து, 9ம் வகுப்பில் சேர்த்தனர். இதேபோல் பல இடைநின்ற மாணவர்கள் பலரும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
வனராஜா கோழி குஞ்சுகள்
27ம் தேதி முதல் விற்பனை
மோகனுார், செப். 25-
'வனராஜா கோழி குஞ்சுகள், வரும், 27ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது' என, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் அழகுதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், ஒருநாள் வயதுடைய வனராஜா கோழி குஞ்சுகள், வரும், 27ல், காலை, 9:00 மணி முதல், விற்பனை செய்யப்படு
கிறது. ஒருநாள் வயதுடைய வனராஜா கோழிகுஞ்சுகள், ஒன்றின் விலை, 24 ரூபாய். வனராஜா கோழிகள் இறைச்சிக்காகவும், (ஆறு மாதத்தில், 2.5 முதல், 3 கிலோ வரை வளரும்), முட்டைக்காகவும் (ஒரு ஆண்டுக்கு, 160 முதல், 180 முட்டைகள்) வளர்க்கப்படுகிறது. ஆர்வம் உள்ள விவசாயிகள், 04286 -266345, 266650 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசு பள்ளி சுற்றுச்சுவர் பூமிபூஜை
முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
குமாரபாளையம், செப். 25-
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் உயரம் குறைவாக இருந்ததால், விடுமுறை நாட்களில் சமூக விரோதிகள், பள்ளி வளாகத்தில் நுழைந்து, சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் பல நடவடிக்கைகள் எடுத்தும் பலனில்லை. இதற்கு நிரந்தர தீர்வாக, பள்ளியின் சுற்றுச்சுவரை உயர்த்தி கட்ட முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் எம்.எல்.ஏ.,மான தங்கமணியிடம் கூறப்பட்டது. அவர், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து, பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட நேற்று பூமிபூஜை நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று, பணிகளை துவக்கி வைத்தார். இதில் அ.தி.மு.க., நகர செயலாளர் பாலசுப்ரமணி, நகர கவுன்சிலர் பழனிச்சாமி, முன்னாள் கவுன்சிலர்கள் ரவி, அர்ச்சுணன், சிங்காரவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆற்றோர வீடுகளால் பாதுகாப்பில்லை: போலீசார் கண்காணிக்க கோரிக்கை
பள்ளிபாளையம், செப். 25-
பள்ளிபாளையம் ஆற்றோரத்தில் ஜனதாகர், பாவடிதெரு, சத்யாநகர் பகுதியில் சமூக விரோத செயல்கள் நடப்பதால், அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கும், ஆற்றுக்கு செல்லும் பெண்களும் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் செந்தில் கூறியதாவது: ஆற்றோரத்தில் காலியாக உள்ள வீடுகளில், இரவு பகலாக சீட்டாட்டம் நடக்கிறது. மது, கஞ்சா விற்பனையும் நடக்கிறது. இதுகுறித்து மூன்று நாட்களுக்கு முன், போட்டோ எடுத்து, வாட்ஸ்அப்பில் போலீசாருக்கு புகார் அனுப்பினேன். போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, யாரும் இல்லை என, எனக்கு பதில் அனுப்பியுள்ளார்கள். எனவே, போலீசார் தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டால், அவர்களை பிடிக்க முடியும். சமூக விரோத செயல்கள் நடப்பதால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். இலவச மருத்துவ முகாமில் 2,000 பேர் பங்கேற்பு
ராசிபுரம், செப். 25-
ராசிபுரத்தில் துவங்கிய இலவச பொது மருத்துவ முகாமில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.
சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை சார்பில், இலவச பொது மருத்துவ முகாம், ராசிபுரத்தில் உள்ள பூவாயம்மாள் திருமண மண்டபத்தில் நேற்று துவங்கியது. முகாமை, நாமக்கல் எம்.பி., சின்ராஜ் தொடங்கி வைத்தார். தி.மு.க., அயலக அணி மாநில துணைச்செயலாளர் முத்துவேல் ராமசுவாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். இலவச மருத்துவ முகாமில், பொது மருத்துவம், நுரையீரல், குழந்தைகள் மருத்துவம், எலும்பு, மூட்டு மருத்துவம், இருதய பரிசோதனை, நரம்பியல், சிறுநீரகம், தோல், காது மூக்கு, தொண்டை, கண், பல், உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக பரிசோதனைகள் செய்து, சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.
பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் நவீன பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. நேற்று ஒரே நாளில், மருத்துவ முகாமில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பயனடைந்தனர். முகாமை, ராமச்சந்திரா கல்வி நிறுவன இணை இயக்குனர் செங்குட்டுவன் நேரில் பார்வையிட்டார். இறுதி நாளான இன்று, முகாம் காலை தொடங்கி, மதியம் 2:00 மணியுடன் நிறைவடைகிறது. பரிசோதனை செய்ய விரும்பும் பொதுமக்கள் காலை நேரத்தில் வர வேண்டும் என, முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
கல்லுாரி மாணவி மாயம்
பெற்றோர் போலீசில் புகார்
எருமப்பட்டி, செப். 25-
எருமப்பட்டி அருகே வரகூரைச் சேர்ந்தவர் கீதா, கூலித்தொழிலாளியான இவரது, 17 வயது மகள், முதலாண்டு கல்லுாரியில் சேர்ந்துள்ளார். வகுப்புகள் தொடங்கவில்லை என்பதால், மாணவி வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த, 23ம் தேதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவி வீட்டை விட்டு சென்று விட்டார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, மாணவியை தேடி வருகின்றனர்.
மணல் கடத்திய டிப்பர் பறிமுதல்
ப.வேலுார், செப். 25-
நாமக்கல் அருகே கந்தம்பாளையம் அருகே, புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி ஆய்வாளர் கவுதமி மற்றும் வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி நோக்கி வந்த டிப்பர் லாரியை சோதனை செய்ததில், அதில் முறைகேடாக கிராவல் மண் ஏற்றி வந்தது தெரிந்தது.
இதையடுத்து லாரி பறிமுதல் செய்யப்பட்டது. லாரியை ஓட்டி வந்த தப்பியோடிய டிரைவரை, நல்லுார் போலீசார் தேடி வருகின்றனர்.
ரூ.14.43 லட்சத்துக்கு
மஞ்சள் விற்பனை
திருச்செங்கோடு, செப். 25-
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த மஞ்சள் ஏலத்தில், விரலி மஞ்சள் குவிண்டால், 6,569 ரூபாய் முதல், 7,922 ரூபாய் வரையிலும், கிழங்கு மஞ்சள், 6,019 ரூபாய் முதல், 6,910 ரூபாய் வரையிலும், பனங்காலி, 10 ஆயிரத்து, 513 ரூபாய் முதல், 12 ஆயிரத்து 049 ரூபாய் வரையிலும் ஏலம் போய், மொத்தம், 416 மூட்டைகள், 14.43 லட்சத்துக்கு விற்பனையானது.
ப.வேலுார் காவிரியாற்றில் திருடிய
150 மணல் மூட்டைகள் பறிமுதல்
ப.வேலுார், செப். 25-
பரமத்தி வேலுார் காவிரியாற்று பகுதியில் போலீசார் சோதனை செய்ததில், அங்கு மணல் திருடியவர்கள் தப்பியோடினர். அவர்கள் வைத்திருந்த, 150 மணல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் அருகே பிலிக்கல்பாளையம் காவிரி ஆற்றில் இரவு நேரங்களில் மணல் திருடப்படுவதாக, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், பரமத்தி வேலுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ப.வேலுார் போலீசார் அப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும், ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த, 5 பேர் தப்பியோடி விட்டனர்.
அவர்கள் சேகரித்து வைத்திருந்த, 150 மணல் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து, சாக்குகளை அவிழ்த்து, மணலை ஆற்றிலேயே கொட்டிச் சென்றனர். இந்நிலையில், பரமத்தி வேலுார் பகுதியில் யாராவது மணல் திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, டி.எஸ்.பி., கலையரசன் எச்சரித்துள்ளார்.
களையெடுப்பு தீவிரம்
எருமப்பட்டி, செப். 25-
எருமப்பட்டி அருகே செல்லிபாளையம், வீசாணம், பழையபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் ஆவணி மாத பட்டமாக பருத்தி பயிரிட்டுள்ளனர். இந்த பருத்தி செடிகள் ஜப்பசி, கார்த்திகை மாதங்களில் அறுவடைக்கு வரும் வகையில், நடவு செய்யப்பட்டுள்ளது. கடந்த, 2 வாரங்களுக்கு முன் இந்த பகுதியில் பெய்த தொடர் கனமழையால், பருத்தி செடிகளில் தண்ணீர் தேங்கி நின்றதுடன், அதிகளவில் களை முளைத்துள்ளது. இதனால் இந்த பகுதி விவசாயிகள் பருத்தி செடிகளில் களை எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ''கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையினால் பருத்தி செடிகளில் களை அதிகரித்துள்ளது.இதனால் தற்போது களை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்,'' என்றனர்.