''தமிழ் பற்றை எல்லாம் டில்லிக்காராள்ட்ட மட்டும் தான் காட்டுவா போலிருக்கு ஓய்...'' என்றபடியே, பில்டர் காபியை உறிஞ்சினார் குப்பண்ணா.
''விஷயத்தை சொல்லும் வே...'' என்றார், அண்ணாச்சி.
''நம்ம அரசாங்கத்துல, தமிழ் வளர்ச்சித் துறைன்னு ஒண்ணு இருக்கோல்லியோ... இவாளோட வேலை என்னன்னா, எல்லா அரசு அலுவலகங்களுக்கும் போய், அங்க தமிழ் பயன்பாடு சரியா இருக்கான்னு ஆராய்ந்து அறிக்கை தரணும் ஓய்...
''ஆனா, இப்ப அந்த வேலை நடக்கற மாதிரியே தெரியலை... தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் சென்னையில செயல்படறது... இந்த வங்கிக்கு 46 கிளைகள் இருக்கு ஓய்...''இங்க, நகைகளை பாதுகாக்கும் லாக்கர் வசதி பெற, வாடிக்கையாளர்களுக்கு விண்ணப்பம் குடுக்கறா... அது முழுக்க இங்கிலீஷ்ல தான் இருக்கு...
மத்திய அரசு அலுவலகங்கள்ல தமிழ் புறக்கணிக்கப்பட்டா போர்க்கொடி துாக்கறவா கண்ணுல இதெல்லாம் படாதா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கையெழுத்து வேட்டை நடத்துறாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு வந்தார் அன்வர்பாய்.
''எதுக்கு ஓய்...''எனக் கேட்டார், குப்பண்ணா.
''முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அ.தி.மு.க.,வுல துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட செயலர் பதவியில இருந்தாரு... அவர், இப்ப பன்னீர்செல்வம் அணிக்கு தாவிட்டதால, மாவட்ட செயலர் பதவி காலியாகிடுச்சு பா...''மாவட்ட அ.தி.மு.க., அவைத் தலைவரா இருக்கிற முன்னாள் எம்.எல்.ஏ., திருஞானசம்பந்தம், மாவட்ட செயலர் பதவியை குறிவச்சு காய் நகர்த்துறாரு... அவர், முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்தவரு பா...
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதியில முத்தரையர்கள் ஓட்டு கணிசமா இருக்குது... ''இதனால, 'எங்க சமுதாயத்தினருக்கு, மாநில நிர்வாகிகள் பதவியில முக்கியத்துவம் தரல... ஆறுதல் பரிசா மாவட்டச் செயலர் பதவி தரணும்'னு, அந்த சமுதாயத்தை சேர்ந்த ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி, தற்காலிக பொதுச் செயலர் பழனிசாமிக்கு அனுப்ப போறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''தி.மு.க.,வுல சேர போய், 'பல்பு' வாங்கியவர் கதை தெரியுமாங்க...'' எனக் கேட்ட அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''மதுரை மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் சரவணன், தி.மு.க.,வுல ஐக்கியமாகிட்டாரே... அவர் பின்னாடியே பலர் தி.மு.க.,வுக்கு போவாங்கன்னு சொன்னாங்க... ஆனா, இன்னைக்கு வரைக்கும் சரவணன் தனியாளா தான் தி.மு.க.,வுல சுத்திட்டு இருக்காருங்க...''இந்த நேரத்துல, பா.ஜ.,வுல மாநில பொறுப்பு வகிக்கும் மதுரைக்காரர் ஒருத்தரை தி.மு.க., பக்கம் இழுக்க முயற்சி நடந்துச்சு... சரவணன் பேச்சை கேட்டு, அவரும் சென்னைக்கு விமானம் ஏறினாருங்க... ''சென்னை அறிவாலயம் போனவருக்கு பயங்கர, 'ஷாக்' கிடைச்சது... அங்க சரவணனை யாருமே மதிக்கலையாம்...
வக்பு வாரிய பதவி கிடைக்கும்னு நம்பி போன மதுரை பிரமுகர் முகம், குப்புன்னு வேர்த்துடுச்சு... அடுத்த விமானத்துலயே மதுரை திரும்பிட்டாருங்க...''மறுநாள் மதுரை வந்த பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை வரவேற்கும் நிகழ்ச்சியில எதுவுமே நடக்காத மாதிரி கலந்துக்கிட்டாருங்க... ஆனா, அவர், சரவணனுடன் அறிவாலயத்துல வலம் வந்த படங்களை பா.ஜ.,வினர் வெளியிட்டுட்டாங்க...
''அவரிடம் கேட்டா, 'நான் சென்னை போனது நிஜம்... ஆனா, அறிவாலயம் பக்கமே போகலை'ன்னு அடிச்சு சொல்றாரு... ஆனாலும், அவரை நம்ப கட்சிக்காரங்க தயாரா இல்லைங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''வாங்க ஷா... வீட்டுல வாப்பா சவுக்கியமா...'' என, நண்பரிடம் அன்வர்பாய் அரட்டையை தொடர, மற்றவர்கள் கிளம்பினர்.