குடிநீர் வாரிய வசூல் கடந்தாண்டை விட...அதிகரிப்பு!: கூடுதலாக 25 சதவீதம் வருவாய் கிட்டியது

Added : செப் 26, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை குடிநீர் வாரியத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளை விட, இந்தாண்டு வரி மற்றும் கட்டணம், 25 சதவீதம் அதிகமாக வசூலாகி உள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், பல ஆண்டுகள் வரி நிலுவை வைத்துள்ள வணிகம் சார்ந்த நிறுவனங்கள் மீது இணைப்பு துண்டிப்பு, ஜப்தி போன்ற அதிரடி நடவடிக்கை காரணமாக, வசூல் சதவீதம் அதிகரித்துள்ளதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னை குடிநீர்
குடிநீர் வாரிய வசூல் கடந்தாண்டை விட...அதிகரிப்பு!: கூடுதலாக 25 சதவீதம் வருவாய் கிட்டியது

சென்னை குடிநீர் வாரியத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளை விட, இந்தாண்டு வரி மற்றும் கட்டணம், 25 சதவீதம் அதிகமாக வசூலாகி உள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், பல ஆண்டுகள் வரி நிலுவை வைத்துள்ள வணிகம் சார்ந்த நிறுவனங்கள் மீது இணைப்பு துண்டிப்பு, ஜப்தி போன்ற அதிரடி நடவடிக்கை காரணமாக, வசூல் சதவீதம் அதிகரித்துள்ளதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சென்னை குடிநீர் வாரியம் வாயிலாக, 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி வழியாக, தினமும் 100 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.


இந்த குடிநீர் பூண்டி, சோழவரம், புழல், தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் நீர்நிலைகள் மற்றும் மீஞ்சூர், நெம்மேலி--1 கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்தும் பெறப்படுகிறது. ஏரிகளில் இருந்து கிடைக்கும் குடிநீர், ஒருபக்கம் இருந்தாலும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், சென்னையின் குடிநீர் தேவையை பற்றாக்குறை இல்லாமல் பூர்த்தி செய்கிறது.


சென்னையில், 7.82 லட்சம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. வாரியத்தின் வருவாய் ஆண்டுக்கு, 950 கோடி ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் குடிநீர், கழிவு நீர் வரி மற்றும் கட்டணம், 570 ரூபாயும், இதர உள்ளாட்சிகள், தொழிற்சாலைகள் மற்றும் லாரி குடிநீர் வழங்குவது வழியாக, 380 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இந்த வகையில், ஏப்., முதல் செப்., வரை முதல் அரையாண்டு மற்றும் அக்., முதல் மார்ச் வரை இரண்டாம் அரையாண்டு என, நுகர்வோர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


வீடுகளுக்கு குடிநீர், கழிவு நீர் வரியாக, ஆண்டு சொத்து மதிப்பில் 7 சதவீதமும், கட்டணமாக மாதம் 80 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், வணிகம் சார்ந்த கட்டடங்களுக்கு வரி 7 சதவீதம். வணிகத்தின் தன்மையை பொறுத்து கட்டணம் மாறுபடும்.அதாவது, 500 இருக்கை கொண்ட திரையரங்கு, திருமண மண்டபத்திற்கு, கழிவு நீர் கட்டணமாக மாதம் 4,400 ரூபாயும்; குடிநீர் 1,000 லிட்டருக்கு 60 ரூபாயும் செலுத்த வேண்டும்.


இந்த வகையில், 13.96 லட்சம் பேர் வரியும், 9.13 லட்சம் பேர் கட்டணமும் செலுத்த வேண்டும். குடிநீர் இணைப்பு வழங்காத விரிவாக்க மண்டலங்களில், வரி மட்டும் செலுத்த வேண்டும்.நடப்பு 2022 - 23 முதல் அரையாண்டில், 475 கோடி ரூபாய் வசூலாக வேண்டும். இதில் நேற்று வரை, 360 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இது, கடந்த ஐந்து ஆண்டுகளை விட, 25 சதவீதம் அதிகம்.விழிப்புணர்வு ஏற்படுத்தியது மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, 'சீல்' நடவடிக்கை காரணமாக, வரி வருவாய் அதிகரித்துள்ளது.


ஐந்து ஆண்டுகளுக்கு மேல்,வரி மற்றும் கட்டணம் செலுத்தாத 3,000 வணிக உரிமையாளர்களுக்கு, கடந்த மாதம் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.இந்த மாதம், 2,696 பேருக்கு குடிநீர் இணைப்பு நோட்டீசும், 1,463 பேருக்கு ஜப்தி நோட்டீசும் வழங்கப்பட்டு உள்ளது.வரும் 30ம் தேதிக்குள், 400 கோடி ரூபாய் வசூலிக்க, வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக, அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.குடிநீர், கழிவு நீர் வினியோகம்


ஆறு வீடுகள் வரை உள்ள கட்டடத்திற்கு அரை அங்குலம் அளவு கொண்ட குழாயில் குடிநீர் வழங்கப்படுகிறது. அதேபோல், 7 - 20 வரை உள்ள வீடுகளுக்கு முக்கால் அங்குலம்; 21 முதல் 40 வரை கொண்ட வீடுகளுக்கு ௧ அங்குலம்; 41 முதல் 70 வரை ஒன்றே கால் அங்குலம்; 70க்கு மேல் கொண்ட வீடுகளுக்கு ஒன்றே முக்கால் அங்குலம் கொண்ட குழாய் வழியாக குடிநீர் வழங்கப்படுகிறது. கழிவு நீர் இணைப்புக்கு, 4 முதல் 6 அங்குலம் வரை கொண்ட குழாய் இணைக்கப்படும்.நுகர்வோருக்கு தகவல்


ஒவ்வொரு நுகர்வோருக்கும் வரி, கட்டணம் மற்றும் நிலுவைத் தொகை தொடர்பாக, அவர்களது மொபைல் போனுக்கு தமிழ், ஆங்கில மொழிகளில் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது; குரல் பதிவும் அனுப்பப்படும். 'வாட்ஸ் ஆப்' வழியாகவும் தகவல் தெரிவிக்கப்படும். மேலும், 7 லட்சம் பேருக்கு தபால் வழியாக வரி, கட்டணம் கேட்பு ஆணை அனுப்பப்பட்டுள்ளது. துண்டு பிரசுரம், ஆட்டோ பிரசாரம், பேனர் கட்டுவது என, விழிப்புணர்வு நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.'‛ஜப்தி' நடவடிக்கை


பல ஆண்டுகளாக வரி, கட்டணம் செலுத்தாத வணிகம் சார்ந்த நுகர்வோருக்கு, மூன்று நாள் அவகாசத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நோட்டீஸ் வழங்கப்படும். அதன் பிறகும் வரி செலுத்தவில்லை என்றால், சென்னை குடிநீர் வாரிய சட்டப்பிரிவு 74ன்படி, ஜப்தி நோட்டீஸ் வழங்கப்படும்.


துணை ஆட்சியர், தாசில்தார், காவல் துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் முன்னிலையில் வரி, கட்டணத்திற்கு இணையாக அசையும் அல்லது அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப் படும். வியாபாரம் பாதிப்பு ஏற்படும் என்பதால், அதிகாரிகள், 'சீல்' நடவடிக்கை எடுக்கின்றனர். இம்மாதம், குடிநீர் இணைப்பு துண்டிப்பால், நிலுவை தொகை 30 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.


- -நமது நிருபர் --


முதல் அரையாண்டு, 400 கோடி ரூபாய் வசூலிக்க முடிவு செய்துள்ளோம். இது, முந்தைய ஆண்டுகளை விட, 25 சதவீதம் அதிகம். குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால், 30 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. நிலுவைத் தொகையில், தலா 10 கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்துள்ள பல நிறுவனங்கள் உள்ளன. நீதிமன்ற உத்தரவால், நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இருந்தாலும், பாரபட்சம் இல்லாமல் குடிநீர், கழிவு நீர் சேவை வழங்குகிறோம். அதற்கு ஏற்ப, நுகர்வோரும் வாரியத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்.

-குடிநீர் வாரிய அதிகாரிகள்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (1)

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X