சுபான்சிரி : அருணாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், கார் அடித்துச் செல்லப்பட்ட 'வீடியோ' வேகமாக பரவி வருகிறது.வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில், முதல்வர் பெமா காண்டு தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.தற்போது, மாநிலம் முழுதும் ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில், சுபான்சிரி மாவட்டத்தில், சிபுதா கிராமத்தில் மலைப் பாதையில் ஒரு கார் செல்கிறது.
சாலையில் வெள்ளம் அதிகமாகச் சென்றதால் கார் நிறுத்தப்படுகிறது. பின், அதில் பயணித்த மூன்று பேர், கீழே இறங்கி முழங்கால் அளவுக்கு ஓடும் தண்ணீரில் நிற்கின்றனர்.சிறிது நேரத்தில், வெள்ளத்தில் மெதுவாக அடித்துச் செல்லப்பட்ட அந்த கார், நிலச்சரிவால் ஏற்பட்ட பள்ளத்தில் உருண்டு கவிழ்கிறது. காரில் பயணித்தவர்கள் முன் கூட்டியே இறங்கிவிட்டதால் உயிர் தப்பினர். இந்த அதிர்ச்சி வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.