சென்னை : ''தமிழகத்தை உச்சத்துக்கு கொண்டு வருவதற்காகவே, திராவிட மாடல் கொள்கை வடிவமைக்கப்பட்டு உள்ளது. திராவிட மாடல் கொள்கை, அனைத்து மாநிலங்களுக்கும் பரவ வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.கனடா நாட்டின் டொரோன்டோ நகரில் நடந்த, மூன்றாவது பன்னாட்டு மனிதநேயம்- சமூக நீதி மாநாட்டில், 'ஆன்லைன்' வாயிலாக பங்கேற்று, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
இது, மனிதநேயம், சமூக நீதி மாநாடாக கூட்டப்பட்டு உள்ளது. மனிதநேயத்தின் அடிப்படையே சமூக நீதி தான். சமூக நீதி கருத்தியலே, மனிதநேயத்தின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டில், சமூக நீதி மண்ணில் இருந்தபடியே நான் பங்கேற்கிறேன். திராவிட மாடல் ஆட்சி நடக்கும் தமிழகத்தில் இருந்து பேசுகிறேன். திராவிட மாடல் ஆட்சியின் மைய கொள்கை என்பது மனிதநேயமும், சமூக நீதியும் தான். அனைத்து இடங்களிலும், சமூக நீதியை நிலைநாட்டி வருகிறோம். வகுப்புரிமை எனப்படும், இடஒதுக்கீடு அனைவருக்கும் சம விகிதத்தில் தரப்பட்டு வருகிறது. பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக இலவச பஸ் பயண வசதி செய்து தரப்பட்டுள்ளது.தமிழ் தாய் வாழ்த்து, மாநில பாடலாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
வேலைவாய்ப்பை அடைவதற்கு, தாய்மொழி அறிவு கட்டாயமாகி உள்ளது. இல்லம் தேடி கல்வி செல்கிறது. மக்களை தேடி மருத்துவம் செல்கிறது. உயர் கல்வி பெறும் அரசு பள்ளி மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாய் தரப்படுகிறது. அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.அனைத்து மாணவ - மாணவியரையும் தகுதிஉள்ளவர்களாக்க, 'நான் முதல்வர் திட்டம்' அமலில் உள்ளது.இப்படி எண்ணற்ற திராவிட மாடல் திட்டங்களை தீட்டி, தமிழகத்தை வளப்படுத்தி வருகிறோம். கடந்த 50 ஆண்டு காலமாக உருவாக்கப்பட்ட இடஒதுக்கீட்டு உரிமைகள், இரு மொழி கொள்கை, தமிழ்மொழி மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றின் காரணமாக, தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது.தமிழகத்தை மேலும் உச்சத்துக்கு கொண்டு வருவதற்காகவே, திராவிட மாடல் கொள்கை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கொள்கை, நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் பரவ வேண்டும். பல்வேறு மாநில அரசுகளும், திராவிட மாடல் கொள்கை, கோட்பாடுகளை அறிவதற்கு ஆர்வமாக இருக்கின்றன. தங்கள் மாநிலத்தில், அதை நடைமுறைப்படுத்த துடிப்புடன் இருக்கின்றன.இவ்வாறு முதல்வர் பேசினார்.