சென்னை : சென்னை,மாங்காடு அடுத்த பரணிபுத்துாரில், 'ரீ லைப் பவுண்டேஷன்' என்ற பெயரில், போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வந்தது. இங்கு, மதுப்பழக்கம் உள்ளவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.சில நாட்களுக்கு முன், மனநலம் பாதிக்கப்பட்ட விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனை, அவரது பெற்றோர் இந்த மையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஆனால், சில நாட்களிலேயே அங்கிருந்து தப்பி வீட்டிற்கு வந்த சிறுவன், மறுவாழ்வு மையத்தில் தன்னை அடித்து துன்புறுத்தியதாவும், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தியதாகவும் கூறியுள்ளான்.அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர், போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, மறுவாழ்வு மைய உரிமையாளர் ரவிக்குமார், 40, உதவியாளர்களான கார்த்திக், ஜெகன், மற்றும் மோகன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், சிறுவனின் புகார் உண்மை என தெரிந்தது.மேலும், இதே தொந்தரவால் அங்கு சிகிச்சை பெற்ற இன்னும் சிலர் தப்பிச் சென்றதும் தெரிந்தது.
இதையடுத்து, மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர்கள், வேறு மையத்திற்கு மாற்றி, இந்த மையத்தை போலீசார் பூட்டினர்.தப்பிச் சென்றவர்களை தேடும் பணியும் துவங்கியுள்ளது.