இத்தாலியில் பலநூறு ஆண்டுகள் பழமையான தேவாலயம் ஒன்று இருந்தது. அதில் வேளை தவறாமல் மணி அடிக்க தாமஸ் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். காலை, மதியம், மாலை என நேரம் பார்த்து தேவாலயத்தில் காண்டாமணியை கயிறு கொண்டு இழுத்து அடிப்பதே அவரது வேலை. பல ஆண்டுகளாக தேவாலயத்திலேயே தங்கிவிட்ட அவருக்கு குடும்பம், குழந்தைகள் கிடையாது. காலம் உருண்டோட, தாமஸ் வயோதிகராகிறார்.
![]()
|
இத்தாலியில், அரசு மாற்றங்கள் பலவற்றை அவர் தன் வாழ்நாளில் பார்த்துவிட்டார். அரசுகள் மாறியதால் அவர்களின் கொள்கைகளுக்கு ஏற்ப நாட்டில் சட்டத்திருத்தமும் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் புதிய சீர்திருத்த மசோதாக்கள் தாக்கலாகின. அதுபோன்ற ஓர் மசோதா, தாமஸின் வேலைக்கு உலை வைத்தது.
![]() Advertisement
|
இனி கத்தோலிக தேவாலயத்தின் பணியாளர்கள் குறைந்தபட்சம் பள்ளிப் படிப்பு படித்திருக்கவேண்டும் எனவும், பள்ளிக் கல்வி சான்றிதழ் சமர்ப்பிக்காமல் ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவர் என்றும் அறிவித்தது. தாய், தந்தை ஆதரவற்ற தாமஸ், தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் தேவாலயத்தில் பணியாற்றி வருகிறார். இந்த உத்தரவைக் கேட்ட அவர் ஆடிப்போனார்.
![]()
|
அவரை மணி அடிக்கும் பணியிலேயே வைத்துக்கொள்ள தலைமை பாதிரியார் அரசிடம் மனு அளித்தும் பயனில்லை. விரைவில் தாமஸ் பணி நீக்கம் செய்யப்பட இருந்தார். இதனால் கவலையில் மூழ்கிய தாமஸ், ரோம் நகர சாலை ஒன்றில் தன்னந்தனியாக நடந்து செல்கிறார். அப்போது அவருக்கு லேசான பசிவேறு. சட்டைப் பாக்கெட்டில் ஒரு யூரோ மட்டுமே இருந்தது. சரி பக்கத்தில் ரொட்டிக் கடை எங்காவது உள்ளதா எனப் பார்த்தார்.
![]()
|
மாலை வேளையில் அந்த சாலை வெறிச்சோடிக் கிடக்க, அந்த தெருவிலேயே ரொட்டிக் கடை இல்லை என்பதை அறிந்துகொண்டார். பசி வயிற்றைப் பிசைந்த போதும் அவருக்கு யோசனை ஒன்று பிறந்தது. நாம் ஏன் இங்கு ஓர் ரொட்டிக் கடை போடக் கூடாது? தேவாலயத்தில் சமையல் வேலை செய்த அனுபவமும் உள்ளதே என நினைக்கிறார்.
அடுத்த மாதம் தேவாலயப் பணியில் இருந்து கட்டாய ஓய்வு பெற்ற தாமஸுக்கு அவரது இத்தனை ஆண்டுகால சேவையைப் பாராட்டி தலைமை பாதிரியார், 500 யூரோ சன்மானம் வழங்குகிறார். இதனை வைத்து அந்தத் தெருவில் தாமஸ் சிறிய ரொட்டிக் கடை ஒன்றைத் துவக்குகிறார். அவரது கடைக்கு நாள்பட கூட்டம் அதிகரிக்கிறது.
![]()
|
வரும் லாபத்தில் இரண்டு பணியாட்களைப் பணியமர்த்தி கடையை விரிவு படுத்துகிறார். சில ஆண்டுகளிலேயே தாமஸ் பேக்கரி, ரோம் நகரில் ஓர் முக்கிய பேக்கரியாக உருவெடுக்கிறது. நகரமெங்கும் பல கிளைகள் திறக்கப்படுகின்றன. தேவாலயத்திலிருந்து 60 வயதில் வெளியேறிய தாமஸ், தனது 70-வது வயதில் பெரும் தொழிலதிபராகிறார்.
தாமஸின் அபார வளர்ச்சியைக் கண்டு தனியார் வங்கிகள் பல, அவருக்கு தொழில் கடன் அளிக்க போட்டியிடுகின்றன. மேலும் தங்கள் வங்கியில் அவர் தனது வர்த்தகக் கணக்கைத் திறக்க வங்கி மேலாளர்கள் போட்டிபோட்டனர். இதுதொடர்பாகப் பேச தாமஸ் வீட்டுக்கு வந்த ஓர் வங்கி மேலாளர், தங்கள் வங்கியை பரிசீலிக்க தாமஸிடம் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட தாமஸ் அதற்கான ஏற்பாட்டை செய்யச் சொன்னார்.
![]()
|
வங்கிக் கணக்கு திறக்க மேலாளர் சில ஆவணங்களை கையுடன் கொண்டு வந்திருந்தார். அவற்றில் தாமஸ் கையெழுத்திட தனது பேனாவை எடுத்து தாமஸிடம் நீட்டினார். உடனே தாமஸ் புன்னகையுடன் தனக்கு எழுதப் படிக்கத் தெரியாது எனவும் கைநாட்டு இட, மை வேண்டும் என்றும் கூறினார்.
வியப்பில் மூழ்கிய மேலாளரோ
'நீங்கள் பள்ளி சென்று கல்வி கற்காமலேயே இவ்வளவு பெரிய தொழிலதிபராக வளர்ந்துள்ளீரே..! ஒருவேளை நீங்கள் படித்திருந்தால்..?' என்றார்.
'தேவாலயத்தில் மணி அடித்துக்கொண்டு இருந்திருப்பேன்..!'
இந்தக் கதை நமக்கு சொல்லும் பாடம், பள்ளி, கல்லூரி படிப்பு தேவைதான். ஆனால் வாழ்க்கை அனுபவம் நமக்குக் கற்றுத் தரும் பாடத்தை எந்த கல்வி நிலையத்தாலும் கற்றுத்தர முடியாது என்பதே..!