2 மடங்கான ரேஷன் கடை வசூல் வேட்டை!
''ஓட்டுக்கு துட்டு குடுத்த அநியாயத்தை கேட்டீங்களா...'' என்றபடியே நாளிதழை மடித்து வைத்தார், அந்தோணிசாமி.
''இப்ப எந்த தேர்தலும் நடக்கலையே பா...'' என்றார், அன்வர்பாய்.
''தலைமை செயலகத்துல, 6,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள்வேலை பார்க்கிறாங்க...அவங்களுக்கு, தலைமை செயலக ஊழியர்கள் சங்கம் செயல்படுது...
''இந்த சங்கத்துக்கு சமீபத்துல தேர்தல் நடந்துச்சு... சங்கத்தின் தலைவரா இருந்த பீட்டர் அந்தோணிசாமி குழுவினர், 'வின்னர்ஸ்' என்ற பெயர்ல போட்டியிட்டாங்க... இந்த குழுவை எதிர்த்து, 'அகரம், அச்சீவர்ஸ்'னு சில குழுக்கள் போட்டியிட்டுச்சுங்க...
''ஓட்டுப்பதிவின் போது, 'வின்னர்ஸ்' குழுவினர் ஓட்டுக்கு தலா, 500 ரூபாய் குடுத்தாங்களாம்... பணம் குடுத்தவங்களை,
'அகரம்' குழுவினர் மடக்கி பிடிச்சாங்க...
''போலீஸ் தலையிட்டு சமரசம் செஞ்ச பிறகு, ஓட்டுப்பதிவு தொடர்ந்துச்சுங்க... பணம் குடுத்தும், 'வின்னர்ஸ்' அணி தோத்துடுச்சு... 'அகரம்' அணி ஜெயிச்சிடுச்சுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''பேக்கேஜ் டெண்டரால, அரசுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாறதுன்னு சொல்றா ஓய்...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார், குப்பண்ணா.
''எந்த துறையில வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''தமிழகம் முழுக்க காவிரி, கொள்ளிடம், தாமிரபரணி உள்ளிட்ட பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் வாயிலா, குடிநீர் வடிகால் வாரியம் தண்ணீர் சப்ளை செய்யறது...
''முந்தைய நிதியாண்டுல, ஒரு கூட்டு குடிநீர் திட்டத்தை அதிகபட்சமா, 16 ஒப்பந்ததாரர்கள் வரை பராமரிச்சுண்டு இருந்தா... இவாளுக்குள்ள ஒற்றுமை இல்லாததால, குடிநீர் வினியோகம், பராமரிப்புல பல சிக்கல்கள் வந்தது ஓய்...
''அதனால, ஒரு கூட்டு குடிநீர் திட்டத்தை ஒரு ஒப்பந்ததாரருக்கு வழங்கற, 'பேக்கேஜ்' டெண்டர் முறையை குடிநீர் வடிகால் வாரியமும் பின்பற்ற ஆரம்பிச்சிடுத்து... வேலையை முடிக்க முடிக்க ஒப்பந்ததாரருக்கு பணத்தை விடுவிக்கறா ஓய்...
''இதனால, குடிநீர் வினியோகம் தடைபடாததோட, நடப்பாண்டுல, இதுவரை, 100 கோடி ரூபாய் அரசுக்கு மிச்சமாகி இருக்காம்... ஆனா, இதனால தங்களுக்கு பாதிப்பு ஏற்படுதுன்னு சின்ன ஒப்பந்ததாரர்கள் கோர்ட் படி ஏறியிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''வசூல் ரெண்டு மடங்காயிட்டு வே...'' என கடைசி மேட்டருக்கு மாறிய அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''கூட்டுறவு சங்கங்கள் சார்புல நிறைய ரேஷன் கடைகளை நடத்துதாவ... ஒவ்வொரு சங்கமும் சரக மேலாளர், காசாளர் பதவிகளை ஏற்படுத்தி வச்சிருக்கு வே...
''பணம் புழங்குற பசையுள்ள இந்த பதவிகள்ல, ஆளுங்கட்சியைச் சேர்ந்த ரேஷன் ஊழியர்கள் தான் நியமிக்கப்படுதாவ... ஒரு சரக மேலாளர், 30 - 40 ரேஷன் கடைகளை கவனிக்காரு வே....
''அந்த கடைகள்ல வசூலாகிற பணத்தை பேங்க்ல போடுறது, கடையின் செயல்பாட்டை கவனிக்கிறது எல்லாம் இவர் பொறுப்பு...
''அ.தி.மு.க., ஆட்சியில, ரேஷன் கடையில நடக்கிற எடை குறைவு உள்ளிட்ட முறைகேடுகளை கண்டுக்காம இருக்க, அப்ப இருந்த மேலாளர்கள், கடைக்கு மாசம், 500 ரூபாய், 'கட்டிங்' வாங்கினாவ வே...
''தி.மு.க., ஆட்சியில, இதை, 1,000 ரூபாயா உசத்திட்டாவ... பணம் தர மறுக்கும் நேர்மையான ஊழியர்கள் பத்தி, அதிகாரிகளிடம் பொய் புகார் குடுத்து பழிவாங்குதாவ வே...'' என முடித்தார்,
அண்ணாச்சி.அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.