சென்னை:சென்னையில், 13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, நாசம் செய்த வழக்கில், போலீஸ் இன்ஸ்பெக்டர், பா.ஜ., பிரமுகர், உணவு வழங்கல் துறை அதிகாரி உட்பட, 13 பேருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுமியின் உறவினர்கள் எட்டு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை 'போக்சோ' சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், 2020ல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், தன் 13 வயது மகளை, தன் அக்கா மகளும், அவரது கணவரும் சேர்ந்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, வன்கொடுமை செய்துள்ளதாக கூறியிருந்தார்.
26 பேர் மீது வழக்கு
இச்சம்பவம் குறித்து, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.சிறுமியின் உறவினர்கள், எண்ணுார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புகழேந்தி, 45, பா.ஜ., வடசென்னை மாவட்ட பிரமுகர் ராஜேந்திரன், 44, உணவு வழங்கல் துறை அதிகாரி கண்ணன், 53, உட்பட 26 பேர் மீது, பாலியல் வன்முறை தொடர்பான, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
22 பேர் கைது
இதையடுத்து, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கில் தொடர்புடைய26 பேரில், 22 பேரை போலீசார் கைது செய்தனர்; நான்கு பேர் தலைமறைவாகினர்.மீதமுள்ள 22 பேர் மீதான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, எம்.ராஜலட்சுமி முன் நடந்து வந்தது. வழக்கில், அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜரானார்.
மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில், 22 பேர் மீது, 600 பக்கங்கள் உடைய குற்றப்பத்திரிகையை, 2021 பிப்., 5ல் விசாரணை அதிகாரியான போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி தாக்கல் செய்தார்.இந்த வழக்கில், 96 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணையின் போது, ஆக., 7ல் குற்றவாளி மாரீஸ்வரன் என்பவர் இறந்து விட்டார். அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதையடுத்து, ஏழு பெண்கள் உட்பட 21 பேரும் குற்றவாளிகள் என்றும், தண்டனை விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், 15ல் நீதிபதி தீர்ப்பளித்தார். குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
வன்கொடுமை
அதன்படி இந்த வழக்கு, நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் பட்டியலிடப்பட்டது. குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 21 பேரும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பகல் 12:00 மணிக்கு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின், 12:30 மணிக்கு தண்டனை விபரங்களை நீதிபதி அறிவித்தார்.
அதன் விபரம்:சிறுமி என்றும் பாராமல், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வன்கொடுமை செய்துள்ளனர்; இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால், குற்றவாளிகளுக்கு கருணை காட்டக் கூடாது.எனவே, ஆறு பெண்கள்உட்பட சிறுமியின் உறவினர்கள் எட்டு பேருக்கு, இரட்டை ஆயுள் தண்டனை, தலா 17 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இன்ஸ்பெக்டர் புகழேந்தி, பா.ஜ., பிரமுகர் ராஜேந்திரன், உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரி கண்ணன், 53, காமேஸ்வரராவ், 33, முகமது அசாருதீன், 33,
பசுலுதீன், 32, தனியார் 'டிவி' நிருபர் வினோபாஜி, 39.
கிரிதரன், 36, ராஜாசுந்தரம், 62, நாகராஜ், 30, பொன்ராஜ், 35, வெங்கட்ராம் என்ற அஜய், 25, அனிதா என்ற கஸ்துாரி, 36 ஆகிய, 13 பேருக்கு, தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.இன்ஸ்பெக்டர் புகழேந்திக்கு, 1.25 லட்சம் ரூபாயும், உணவு வழங்கல் துறை அதிகாரி கண்ணன், ராஜாசுந்தரம் ஆகியோருக்கு, தலா 1 லட்சம் ரூபாயும், பா.ஜ., பிரமுகர் ராஜேந்திரன், வினோபாஜி, கிரிதரன், காமேஸ்வரராவ் ஆகியோருக்கு, தலா 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது. மொத்தம், 7 லட்சத்து 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த தண்டனையை, அனைத்து குற்றவாளிகளும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு, தமிழக அரசு இழப்பீடாக, 5 லட்சம் ரூபாயும், அபராத தொகையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.இதில் இன்ஸ்பெக்டர் புகழேந்திக்கு மட்டும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், 20 ஆண்டு; சிறுமி என தெரிந்தும், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றத்துக்காக, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
'பணம் சம்பாதிக்கும் நோக்கில் பாலியல் தொழிலில் ஈடுபடும் கும்பலிடம், பெரும்பாலும் சிறுமியர் இரையாகின்றனர்; அவர்களிடம் சிறுமியர் இரையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என, தீர்ப்பில் நீதிபதி கூறி உள்ளார்.