ஸ்ரீபெரும்புதுார், : 'ஆன்லைன்' விற்பனை நிறுவனத்தில், 'ட்ரோன்' கேமரா 'ஆர்டர்' செய்தவருக்கு, பொம்மை கார் பார்சலில் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் சிவன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் மைதீன், 35; ஏ.சி., மெக்கானிக். இவர், ஆன்லைன் விற்பனை நிறுவனம் ஒன்றில், 79 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, ட்ரோன் கேமரா வாங்க, 20ம் தேதி ஆர்டர் செய்தார்.
இதற்கான பணத்தை, 'கிரெடிட் கார்டு' மூலம் செலுத்தியுள்ளார்.நேற்று முன்தினம் காலை, அந்நிறுவனத்திடம் இருந்து பார்சல் வந்தது. இதை பிரித்து பார்த்த போது, உள்ளே சிறுவர்கள் விளையாடும் பொம்மை கார் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து அவர், ஆன்லைன் நிறுவனத்தை தொடர்பு கொண்டார். அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.