சென்னை : தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடரும் நிலையில், சென்னை அறிவாலயத்திற்குள் மண்ணெண்ணெய் கேனுடன் நுழைந்து, தி.மு.க., நிர்வாகி தீக்குளிக்க முயற்சித்த சம்பவம், அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தி.மு.க., மாவட்டச் செயலர்கள் தேர்தலுக்கான மனுத் தாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்தது.ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
போட்டி இருக்கும் பட்சத்தில், சில மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்த, கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது.இந்நிலையில், தி.மு.க., தலைமை அலுவலகமான, சென்னை அறிவாலயத்தில் பஞ்சாயத்து செய்யும் மூத்த அமைச்சர் ஒருவரின் செயல்பாடுகளில், கட்சியினர் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
'மூத்த அமைச்சரோ, 'பெரியண்ணன்' பாணியில், தனக்கு நன்கு அறிமுகமான மாவட்டச் செயலர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்.'அவர்களை எதிர்த்து போட்டியிட்டோருக்கு துணை செயலர், தலைமை செயற்குழு உறுப்பினர் போன்ற பதவிகள் வழங்காமல், ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்' என, அதிருப்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.,வில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக, இன்று அறிவாலயத்தில் பஞ்சாயத்து நடக்க உள்ளது.
இதற்கிடையில், உட்கட்சி தேர்தல் தொடர்பாக, அறிவாலயத்தில் தீக்குளிக்க முயற்சித்த சம்பவமும் அரங்கேறியது.அறிவாலயத்தில் நுழைவதற்கு மூன்று வாயில்கள் உள்ளன. தி.மு.க., ஆட்சி அமைந்த நாள் முதல், அங்கு எப்போதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு உள்ளது. இந்த சூழ்நிலையில், சென்னை பெரம்பூர் தி.மு.க., நிர்வாகி அமல்ராஜ், தனக்கு பொருளாளர் பதவி கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில், பெட்ரோல் கேனுடன் நேற்று அறிவாலயம் வந்தார். போலீஸ் பாதுகாப்பையும் மீறி, உள்ளே புகுந்து தீக்குளிக்க முயற்சித்தார்.அங்கிருந்த தி.மு.க.,வினரும், போலீசாரும், அமல்ராஜ் மீது தண்ணீர் ஊற்றி, அவரை காப்பாற்றினர்.