வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை: மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு எதிராக நடவடிக்கை கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருச்சி ஸ்ரீ ரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த பொதுநல மனு: ஈ.வெ.ரா. பிறந்தநாளை முன்னிட்டு மனு ஸ்மிருதி வேதங்கள் மற்றும் ஆகமங்களை ஸ்ரீரங்கத்தில் செப். 17ல் மக்கள் அதிகாரம் அமைப்பினர் எரிக்க உள்ளதாக தகவல் பரவியது.
ரிக் யஜுர் சாம அதர்வண வேதங்களை நம்பும் ஹிந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் வேத புத்தகங்களை தவறாக சித்தரிக்கின்றனர். ஸ்ரீரங்கத்தில் போராட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மற்றொரு மனு: மக்கள் அதிகாரம் அமைப்பினர் கருத்து சுதந்திரம் பெயரில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டம் பற்றி தவறான தகவல்களை பரப்புகின்றனர்.
![]()
|
நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிக்கின்றனர். 'அர்ச்சகர் தீர்ப்பு-ஈ.வெ.ரா. நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய தி.மு.க. அரசு. ஈட்டியை செருகிய நீதிமன்றம். என்ன செய்யப் போகிறோம்' என்ற தலைப்பில் சென்னையில் கூட்டம் நடத்தினர். மக்கள் அதிகாரம் தேசிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர் அனுமதியின்றி போராட்டம் நடத்துவதை தடை செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
செப். 16 ல் நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. தமிழக அரசுத் தரப்பு 'பொது அமைதியை நிலைநாட்ட தி.க. மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பு நிர்வாகிகளுடன் சமாதானக் கூட்டம் நடந்தது. செப். 17 ல் நடைபெறவிருந்த போராட்டம் கைவிடப்படுகிறது. மீறினால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப் பட்டது' எனக்கூறி ஆவணம் தாக்கல் செய்தது.நீதிபதிகள்: சமாதானக் கூட்ட தீர்மானத்தின்படி மனுதாரர் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
சம்பந்தப்பட்ட பகுதியில் பொது அமைதியை நிலைநாட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டம் என்ற போர்வையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஸ்ரீரங்கநாதர் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக மனுதாரர் கூறுகிறார். தேவையான போலீஸ் பாதுகாப்பை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர்.
நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு: செப். 17ல் ஸ்ரீரங்கத்தில் எவ்வித விரும்பத்தகாத சம்பவமும் நடைபெறவில்லை என மனுதாரர் தெரிவித்துள்ளார். அவ்வழக்கு பைசல் செய்யப்படுகிறது. மற்றொரு வழக்கில் தமிழக உள்துறை செயலாளர் டி.ஜி.பி.க்கு நோட்டீஸ் அனுப்பி 3 வாரங்கள் ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.