வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை : மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் நர்சிங் படித்த 169 செவிலியர்கள் நேற்று ஒன்றுக்கூடி தற்கொலையை தடுப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதுவரை கவுன்சிலிங் கொடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயிர்களை இவர்கள் காப்பாற்றி உள்ளனர்.மதுரை அரசு மருத்துவக்கல்லுாரியில் 2004-07 ல் நர்சிங் படித்த 169 பேர் இன்று பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிகின்றனர். அவ்வப்போது இவர்கள் சந்தித்து வந்தனர். தங்கள் சந்திப்பு பயனுள்ளதாக இருக்க வேண்டும் எனக்கருதினர்.
இதற்கான முயற்சியை சென்னை புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி., அருண்மொழி எடுத்தார்.மதுரையில் நேற்று 169 பேரும் 'வாழ்வோம், வாழ்விப்போம்' என்ற பெயரில் ஒன்று கூடினர். தற்கொலை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் தமிழகத்தில் முதன்முறையாக இந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
![]()
|
நமது நிருபரிடம் டி.எஸ்.பி., அருண்மொழி கூறியதாவது: இரண்டு ஆண்டுகளாகவே நாங்கள் தற்கொலை முயற்சியை தடுக்க கவுன்சிலிங் கொடுத்து வருகிறோம். நர்ஸிங் படித்த நான் 2019ல் டி.எஸ்.பி.,யாகி விட்டாலும் நண்பர்களுடன் சேர்ந்து இப்பணியை செய்து வருகிறேன். அரசின் இலவச டோல் ப்ரீ எண் '104'க்கு போன் செய்தால் எங்களுக்கு தகவல் தெரிவிப்பர். அருகில் இருந்தால் நேரில் சென்று கவுன்சிலிங் கொடுப்போம். இல்லாதபட்சத்தில் போனிலேயே கவுன்சிலிங் கொடுப்போம்.
இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயிரை காப்பாற்றி உள்ளோம். தற்கொலை தீர்வு அல்ல என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.தவிர அரசு போட்டித் தேர்வுகளுக்கு இளைஞர்களை தயார்படுத்தும் ஏ.பி.ஜே., இலவச கோச்சிங் வகுப்பை நடத்தி வருகிறோம். இதுவரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்.