மதுரை : 'அங்கீகாரம் இல்லாத மனைப் பிரிவுகளை பதிவு செய்வதை தடை செய்யும் சட்டம் அமலுக்கு வந்த பின் அங்கீகாரம் இல்லாத பிளாட்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதன் விபரங்களை பதிவுத்துறை தலைவர் தாக்கல் செய்ய வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தேனி பழநிசெட்டிபட்டியை சேர்ந்த சரவணன் என்பவர், சமீபத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:
வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிலர் வீடுகள் கட்ட நில வரைபட அனுமதியை பேரூராட்சி நிர்வாகத்திடம் பெறவில்லை.இதனால் பேரூராட்சிக்கு வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நகர் ஊரமைப்பு இயக்கக அனுமதியும் பெறவில்லை. நிலத்தை புஞ்சை என சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். அப்பகுதியில் விவசாயம் நடைபெறவில்லை.
முறைகேடாக பத்திரம் பதிந்ததால் பிளாட்களை வாங்கிய அப்பாவிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அங்கீகாரம் இல்லாத பிளாட்களை பதிவுத்துறை சட்டப்படி பதிவு செய்யக்கூடாது. இதை மீறி சில மூன்றாம் நபர்கள் பயனடையும் நோக்கில் தேனி சார் பதிவாளர் உஷாராணி செயல்பட்டுள்ளார்.
வீரபாண்டியில் அங்கீகாரம் இல்லாத குறிப்பிட்ட சர்வே எண்களுக்குரிய பிளாட்களுக்கு பதிவுகள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். சார்பதிவாளர் உஷாராணி மீது நடவடிக்கை எடுக்க பதிவுத்துறை தலைவர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு சரவணன் மனு செய்திருந்தார்.
மனு தொடர்பாக ஏற்கனவே நடந்த விசாரணையின்போது தமிழக அரசுத் தரப்பு, 'சார் பதிவாளர் உஷாராணி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்' என தெரிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
அங்கீகாரம் இல்லாத பிளாட்களை சார்பதிவாளர்கள் பதிவு செய்யக்கூடாது. அங்கீகாரம் இல்லாத மனைப் பிரிவுகளை பதிவு செய்வதை தடை செய்யும் சட்டம் அமலுக்கு வந்த பின் அங்கீகாரம் இல்லாத பிளாட்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதன் விபரங்களை பதிவுத்துறை தலைவர் இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.