தடை செய்யப்பட்ட புகையிலை
விற்ற இருவர் கைது
குளித்தலை, செப். 27-
குளித்தலை அருகே மளிகை கடை, பெட்டிக்கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற, இருவரை போலீசார் கைது செய்தனர்.
குளித்தலையை அடுத்த, வரவனை பஞ்., பாப்பனம்பட்டியை சேர்ந்தவர் பரமேஸ்வரன், 51. தனது மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் விற்பனை செய்தார்.
இதேபோல், கீழசக்கரக்கோட்டையில் பழனிசாமி தனது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் விற்பனை செய்தார். தகவலறிந்த சிந்தாமணிபட்டி போலீசார், இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.
உடலில் காயத்துடன்
வாலிபர் சடலம் மீட்பு
குளித்தலை, செப். 27-
திருச்சி மாவட்டம், கீழ கல்கண்டார்கோட்டை, வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ராஜா, 26. பெயிண்டர் வேலை செய்து வந்தார். குடி பழக்கம் உள்ள இவர், திருப்பூரில் உள்ள அவரது அக்கா கிருத்திகாவை சென்று பார்த்துவிட்டு, நேற்று முன்தினம் இரவு திருப்பூரில் இருந்து புறப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 2:00 மணியளவில் திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சிந்தலவாடி பகுதியில், முகத்தில் பலத்த ரத்த காயத்துடன் ராஜா இறந்து கிடந்தார். தகவலறிந்த லாலாப்பேட்டை போலீசார், அங்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உயிரிழந்த ராஜாவின் சித்தி, வசந்தி, 62, கொடுத்த புகாரின் படி, போலீசார் விசாரிக்கின்றனர்.
அமராவதி ஆற்றில் மணல்
அள்ளியவர் கைது
கரூர், செப். 27-
கரூர் அருகே, அமராவதி ஆற்றில் இருந்து மொபட்டில், மணல் அள்ளி சென்றவரை, போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் போலீஸ் எஸ்.ஐ., சந்திரசேகரன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் செல்லாண்டிப்பாளையம், அமராவதி ஆற்றுப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அமராவதி ஆற்றில் இருந்து, டி.வி.எஸ்., மொபட்டில், 4 மூட்டைகளில் மணல் அள்ளி சென்றதாக ராயனுார் பகுதியை சேர்ந்த பிரபாகர், 33; என்பவரை பிடித்து, கைது செய்து, விசாரிக்கின்றனர்.
சாலையோரத்தில்
பெண் சடலம்
குளித்தலை, செப். 27-
குளித்தலையை அடுத்த, குமாரமங்கலம் பஸ் ஸ்டாப் அருகே திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் காலை, 8:30 மணியளவில்,55 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார்.
வி.ஏ.ஓ., அலிமா, 44, கொடுத்த புகாரின்படி, குளித்தலை போலீசார், அங்கு சென்று பெண் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர், இது குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
சேலம் நெடுஞ்சாலையில்
தடுப்புகள் இல்லாததால் விபத்து
கரூர், செப். 27-
கரூர் - சேலம் நெடுஞ்சாலையில் பல்வேறு கிராமப் பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் இணைகின்றன. பிரிவு சாலைகள் உள்ள பெரும்பாலான இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்படவில்லை. மேலும், சாலையின் ஓரத்தில் மிகப்பெரிய பள்ளங்கள் உள்ளன. இதற்கு தடுப்புகளும் வைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரத்தில் வாகனங்களை ஓட்டும் டிரைவர்களுக்கு பள்ளங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, கரூர் -- சேலம் சாலையில் தளவாப்பாளையம் பிரிவில் பல விபத்துகள் நடந்துள்ளன. ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இதனால், தடுப்புகள் வைக்க நடவடிக்கை தேவை.
ராஜவாய்க்காலில் கொட்டப்படும்
இறைச்சி கழிவுகள்
கரூர், செப். 27-
கரூர் அருகே வெங்கமேடு பாலம் அருகே பழைய ராஜவாய்க்கால்
செல்கிறது. இந்த வாய்க்காலில், வீடுகள், சாயப்பட்டறைகளில்
இருந்து வெளியேறும் கழிவுநீரே செல்கின்றன. மேலும், வெங்கமேடு
பகுதியில், 20க்கும் மேற்பட்ட கோழி, மீன்கள் இறைச்சி
விற்பனை கடைகள் உள்ளன. இங்கு மீதமாகும் இறைச்சி
கழிவுகளை ராஜவாய்க்காலில் கொட்டி விடுகின்றனர். இதனால்,
அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ராஜவாய்க்காலில்
இறைச்சி கழிவுகளை கொட்டுவோர் மீது, கடுமையான
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாய்க்கால் பாலங்களில்
தடுப்பு சுவர் அமைக்கப்படுமா?
கரூர், செப். 27-
கரூர் - நெரூர் சாலையின் குறுக்கே, பல இடங்களில், காவிரியாற்றின் கிளை வாய்க்கால்கள் செல்கின்றன. வாய்க்கால் மேல் பகுதியில்
சிறுபாலங்கள், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டன.
இந்த வழியாக தினமும் ஏராளமான பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால், பாலத்தில் கட்டப்பட்ட தடுப்பு சுவர்கள் உடைந்துள்ளதால், வாகனங்கள் வாய்க்காலில், கவிழும் அபாயம்
உள்ளது. எனவே, கரூர் - நெரூர் சாலையில் வாய்க்கால் பகுதியில் பாலத்தில் உடைந்த தடுப்பு சுவர்களை சீரமைக்க வேண்டும்
என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30ல் விவசாயிகள்
குறைதீர் கூட்டம்
கரூர், செப். -27-
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வரும் 30ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை:
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வரும் 30ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே, கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புவோர், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, முக கவசம் அணிந்து பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழ்பவானி கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை: விவசாயிகள் கலெக்டரிடம் புகார்
கரூர், செப். -27-
கீழ்பவானி கால்வாய் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை என, கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பினர், கரூர் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:
கீழ்பவானி கால்வாயில் கடைமடை பகுதியான கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகில் மொஞ்சனுார், அஞ்சூர் ஆகிய பகுதிகளுக்கு பாசன நீர் வரவில்லை. இதனால், கிணற்று பாசனம் இல்லாத பகுதிகளில் நெல் நாற்றங்கால் தயாரிக்க முடியவில்லை. மேலும், ஏற்கெனவே நெல் நாற்றங்கால் தயாரிக்கப்பட்ட சில இடங்களிலும் போதிய தண்ணீர் விடமுடியவில்லை. இது குறித்து நீர்வளத்துறையினரிடம் கேட்டால், கால்வாயில் கசிவு காரணமாக கடைமடைக்கு தண்ணீர் கொடுக்க முடியவில்லை என தெரிவித்தனர்.
எனவே, மாவட்ட
நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, கடைமடை பகுதிகளில் நடவு பணிகள் மேற்கொள்ளும் வகையில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருப்பத்துார் பகுதியில்
கொசு ஒழிப்பு பணி
கிருஷ்ணராயபுரம், செப். 27-
கிருஷ்ணராயபுரத்தை அடுத்த கருப்பத்துார் பகுதியில் சுகாதாரத் துறை சார்பில் கொசு ஒழிப்பு பணி நடந்தது.
கள்ளப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கருப்பத்துார் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் சுகாதாரத் துறை சார்பில் கொசு ஒழிப்பு பணி நடந்தது. இதில் வீடுகளில் சுற்றுப்புறத் துாய்மையை மேம்படுத்துதல், குப்பைகளை அகற்றுதல், குடிநீரை மூடி வைத்தல், மழைக் காலங்களில் மழை நீர் தேங்கும் இடங்களில் பிளீச்சிங் பவுடர் தெளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், கொசு உற்பத்தியை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இப்பணிகளில் மஸ்துார் பணியாளர்கள் ஈடுபட்டனர். பணிகளை சுகாதார ஆய்வாளர் ராஜா மேற்பார்வையிட்டார்.
லாலாப்பேட்டையில்
கழிவு நீர் கால்வாயில் அடைப்பு
கிருஷ்ணராயபுரம், செப். 27-
லாலாப்பேட்டை, பிள்ளபாளையம் சாலை வழியாக செல்லும் கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு
ஏற்படும் அபாயம் உள்ளது.
கிருஷ்ணராயபுரத்தை அடுத்த லாலாப்பேட்டை கொடிக்கால் தெரு பகுதியில் இருந்து பிள்ளபாளையம் சாலை வழியாக கழிவு நீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் செல்லும் கழிவு நீர் முழுவதும் சிறிய
வாய்க்காலில் கலக்கிறது.
தற்போது கழிவு நீர் செல்லும் வழித்தடங்களில் பிளஸ்டிக் கழிவுகள் சேர்ந்து, கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, பஞ்சாயத்து நிர்வாகம், கழிவு நீர் வழித்தடங்களில் உள்ள குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குட்கா விற்ற மூதாட்டி கைது
கரூர், செப். 27-
கரூர் அருகே, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை போலீஸ் எஸ்.ஐ., நாகராஜன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம், கடைவீதி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்களை விற்றதாக, தான்தோன்றிமலை, குறிஞ்சி நகரை சேர்ந்த அலமேலு, 60, என்பவரை, தான்தோன்றிமலை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
மின் பகிர்மான
தொழிற்சங்கத்தினர்
காத்திருப்பு போராட்டம்
கரூர், செப். 27-
தமிழ்நாடு மின் பகிர்மானம், அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் கரூர் மாவட்ட கிளை சார்பில், பொறியாளர் வேல்முருகன் தலைமையில், மேற்பார்வையாளர் அலுவலகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.
இதில், பஞ்சப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், வாரிய ஆணை எண்ணை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்பன உள்பட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில், சி.ஐ.டி.யூ., செயலாளர் தனபால், நிர்வாகிகள் வைரமுத்து, ராமதாஸ், கதிர்வேல், கோபாலகிருஷ்ணன், விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாய்க்கால் பால தடுப்பு
சுவர்களை சீரமைக்க கோரிக்கை
கிருஷ்ணராயபுரம், செப். 27-
கிருஷ்ணராயபுரம் அருகே, கட்டளை மேட்டுவாய்க்கால் பாலங்களின் தடுப்புச் சுவர்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணராயபுரத்தை அடுத்த திருக்காம்புலியூர் பஞ்சாயத்து, மேட்டுத்திருக்காம்புலியூர் பகுதியில் மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து திருச்சி வரை கட்டளை மேட்டு வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் நடுவே விவசாயிகள் செல்லும் வகையில் ஆங்காங்கே சிறு பாலங்கள் உள்ளன.
இந்த பாலத்தின் தடுப்புச் சுவர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் அந்த வழியாக செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் விளை நிலங்களில் இருந்து அறுவடை செய்து வரும் விளை பொருட்களை எடுத்துச் செல்லும்போதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த பாலத்தின் தடுப்புச் சுவர்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.