பொள்ளாச்சி:பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அறிவு சார் மையம் அமைக்கப்படுவதால், மாணவியர் விளையாட முடியாத சூழல் ஏற்படும்.பொள்ளாச்சி பகுதியில் போதிய, விளையாட்டு மைதானங்கள் இல்லாமல் மாணவர்கள் திறமையை வளர்த்து கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், இருக்கும் மைதானங்களும் மாற்றுப்பயன்பாட்டுக்காக கட்டடம் கட்டப்படுவதால் மாணவர்களின் விளையாட்டுத்திறமை கேள்விக்குறியாகும் சூழல் உள்ளது.
அதில், கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அறிவுசார் மையம் அமைக்கப்படுகிறது. இதை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என பொள்ளாச்சி தடகள சங்கத்தினர், சப் - கலெக்டரிடம் மனு கொடுத்து வலியுறுத்தினர். மேலும், தமிழக முதல்வருக்கும் மனு அனுப்பி கோரிக்கை விடுத்துள்ளனர்.தடகள சங்கம் மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி தடகள சங்கம், 19 ஆண்டுகளாக பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தியும், பயிற்சி முகாம்களை நடத்தியும் மாணவர்களை ஊக்கப்படுத்தி திறமையை மேம்படுத்துகிறது.மாணவர்கள், பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்துக்காக ஒரு மைதானத்தை பராமரிக்கிறோம். சர்க்கஸ் மைதான இடத்தை கிரிக்கெட் மைதானமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.தமிழக அரசுக்கும், விளையாட்டுத்துறைக்கும், சமத்துார் ராம ஐயங்கார் நகராட்சி பள்ளி மைதானம் குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் செவி சாய்க்காமல் அங்கு ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கப்பட்டது. அங்கு கால்பந்து மைதானம் அமைக்க கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. ஸ்கேட்டிங் மைதானம் யாருக்கும் பயன் இல்லாமல் உள்ளது.தற்போது, பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எட்டு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. அங்கு, 4.50 ஏக்கரில் பள்ளி கட்டடமும், பள்ளி மைதானத்துக்கு, 3.50 ஏக்கரும் ஒதுக்கப்பட்டது.இந்த மைதானம், சாக்கடை நீர் ஊற்றாக மாறியுள்ளது. ஒருபக்கம் நகராட்சி நிர்வாகம் கழிப்பிடத்தை கட்டியுள்ளது. தற்போதுள்ள மீதி இடமும் மாணவியர் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது.இதுகுறித்து தமிழக முதல்வர், விளையாட்டுத்துறை அமைச்சருக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், அங்கு அறிவுசார் மையம் கட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இங்குள்ள மைதான இடம் குறுகிப்போனதால், விளையாட்டுகளில் ஜொலிக்க வேண்டும் என்ற மாணவியரின் எதிர்கால கனவு, ஆரோக்கியம் அனைத்தும் கேள்விக்குறியாகும். மாணவியர், உடற்பயிற்சி செய்யவும், விளையாட்டு பயிற்சி எடுக்கவும் ஒரு மைதானம் வேண்டும். எனவே, இத்திட்டத்தை மாற்று இடத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தை பராமரிக்க வேண்டும். சர்க்கஸ் மைதானத்தை ஒரு சிறந்த கிரிக்கெட் மைதானமாக மாற்றித்தர வேண்டும். கால்பந்து மைதானம் அமைக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.
Advertisement