எதிர்க்கட்சி தொகுதிகளை புறக்கணிக்கும் அமைச்சர்கள்!
''ஏகப்பட்ட புகார்களை கிடப்புல போட்டிருக்காரு வே...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அண்ணாச்சி.
''எந்த அதிகாரியை சொல்றீர்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''போன ஏப்ரல் மாசம் திறக்கப்பட்ட பெரம்பலுார் மாவட்ட பதிவாளர் அலுவலகத்துக்கு, ஜூலை 13ல தான் புது அதிகாரி வந்தாரு... ஏதோ குளறுபடியில, அவருக்கு சம்பளம் போடல வே...
''ஆள்மாறாட்டம், நில மோசடி பத்திரப் பதிவுகளை ரத்து செய்ய கோரி, இவருக்கு தினமும் நிறைய புகார்கள் வரும்... அதை எல்லாம் விசாரிக்காம, அதிகாரி கிடப்புல போட்டுட்டாரு வே...
''புகார் தந்தவங்க விளக்கம் கேட்டப்ப, 'எனக்கு மாசம் 1.50 லட்சம் ரூபாய் சம்பளம்... இதுவரை அரசாங்கம் சம்பளம் தரல... என் மனைவி, மகள் சம்பளத்துல தான் சாப்பிடுதேன்... சம்பளம் தராம எப்படி வேலை பார்க்கிறது'ன்னு எரிஞ்சு விழுந்திருக்காரு வே...
''இது பெரிய சர்ச்சையானதும், இப்ப அதிகாரிக்கு சம்பளத்தை பைசல் பண்ணிட்டாவ... 'இனியாவது, அதிகாரி ஜரூரா வேலை பார்ப்பாரா'ன்னு புகார் குடுத்தவங்க எதிர்பார்த்துட்டு இருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.
''என்ன மைதீன் அதுக்குள்ள கிளம்பிட்டேள்...'' என, நண்பரிடம் விசாரித்தபடியே, ''ஆசிரியர்கள் எல்லாம் மனம் நொந்து போயிருக்கா ஓய்...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார், குப்பண்ணா.
''அவங்களுக்கு என்னங்க பிரச்னை...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துறதா தி.மு.க., தந்த வாக்குறுதியை கிடப்புல போட்டதால, ஏற்கனவே அரசு மேல அவாள்லாம் அதிருப்தியில தான் இருக்கா... இப்ப, 'இல்லம் தேடி கல்வி' திட்டத்துல பணிபுரியும் தன்னார்வலர்களை கல்வித் துறை அதிகாரிகள், தலை மேல துாக்கி வைக்காத குறையா பாராட்டிண்டு இருக்கா ஓய்...
''தன்னார்வலர்களால ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களின் வாசிப்பு திறன் அதிகரிச்சிருக்குன்னு புள்ளி விபரங்களை அள்ளி விடறா... கல்வித் துறையை இவா தான் காப்பாத்திண்டு இருக்கற மாதிரி அரசுக்கு தகவல் அனுப்பிச்சுண்டு இருக்கா ஓய்...
''இதனால, 'நாங்க அர்ப்பணிப்போட வேலை பார்த்துண்டு இருக்கோம்... அதை, அதிகாரிகள் மதிக்கவே மாட்டேங்கறா'ன்னு ஆசிரியர்கள் எல்லாம் புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என்றார்,
குப்பண்ணா.
''எதிர்க்கட்சி தொகுதிகளை கண்டுக்க மாட்டேங்கிறாங்க பா...'' என, கடைசி மேட்டருக்கு, 'லீடு' தந்தார் அன்வர்பாய்.''எந்த மாவட்டத்துல வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''தர்மபுரி மாவட்டத்துல, அஞ்சு சட்டசபை தொகுதிகள் இருக்கு... இதுல, பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி தொகுதிகள்ல மட்டும் அரசு நலத்திட்ட
உதவிகள் வழங்குதல், ஆய்வு பணிகள்னு அடிக்கடி அமைச்சர்கள் நடமாடுறாங்க பா...
''ஆனா, அ.தி.மு.க., ஜெயிச்சிருக்கிற பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் - தனி தொகுதிகளை கண்டுக்கவே மாட்டேங்கிறாங்க... அந்த தொகுதியில இருக்கிற தி.மு.க.,வினர், 'அமைச்சர்கள் இப்படி இருந்தா, அடுத்த தேர்தல்லயும் இந்த தொகுதிகளை நாம கைப்பற்ற
முடியாது'ன்னு புலம்புறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.''மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டுன்னு, அவங்க தலைவர் அண்ணாதுரை அடிக்கடி
சொல்லுவாருல்லா... அதை மறந்துட்டாவ போலிருக்கு வே...'' என சிரித்தபடி அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.