வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பதி,: திருமலை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக துவங்கியது.
திருமலை ஏழுமலையானுக்கு புரட்டாசி மாதம் வருடாந்திர பிரம்மோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. பிரம்மோற்சவத்தின் போது தினசரி காலை, இரவு என பல்வேறு வாகனங்களில் மலையப்பஸ்வாமி மாடவீதியில் எழுந்தருளி சேவை சாதிப்பது வழக்கம். இந்த திருவிழாவை காண பக்தர்கள் லட்சகணக்கில் திருமலையில் கூடுவர்.
கொடியேற்றம்
ஆனால் கோவிட் தொற்று காரணமாக கடந்த, 2 ஆண்டுகளாக பிரம்மோற்சவத்தின் போது மாடவீதியில் வாகன சேவைகள் ரத்து செய்யப்பட்டது. கோவிலுக்குள் வாகனத்தில் மலையப்பஸ்வாமி எழுந்தருள செய்யப்பட்டார். இந்நிலையில் இந்தாண்டு முதல் ஏழுமலையான் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது. முதல் நாளான இன்று செவ்வாய் மாலை, 5.45 மணிமுதல், 6.15 மணிவரை மீன லக்னத்தில் கொடியேற்றம் நடந்தது.

திருமஞ்சனம்
கருட கொடி
ஏழுமலையானின் வாகனமான கருடனின் உருவத்தை மஞ்சள் நனைத்த பெரிய துணியில் இயற்கை வண்ணங்களால் வரைந்து அதை ஒரு வாகனத்தில் கட்டி அதை மாடவீதியில் ஊர்வலமாக கொண்டு வந்தனர். அதன் பின்னர், பெரிய கஜமாலையில் அந்த கருட கொடியை கட்டி அதை தர்பை புற்களால் செய்த கயிறால் கொடிமரத்தின் மீது அர்ச்சகர்கள் ஏற்றினர். இவ்வாறு கொடியை ஏற்றி முப்பத்து முக்கோடி தேவர்களையும் பிரம்மோற்சவத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். பின்னர் கற்பூரஆரத்தி அளித்து நெய்வேத்தியம் சமர்பிக்கப்பட்டது.
பெரிய சேஷ வாகனம்
திருமலையில் பிரம்மோற்சவத்தின் முதல் வாகன சேவையான பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பஸ்வாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மாடவீதியில் எழுந்தருளினார். ஆதிசேஷன் விஷ்ணுவிற்கு மிகவும் நெருக்கமானவர். ராம அவதாரத்தில் லட்சுமணனாகவும், துவாபர யுகத்தில் பலராமனாகவும் விளங்கினார். வைகுண்டத்தில் உள்ள நித்யசூரிகளில் இவரே முதன்மையானவர். பூமியின் பாரத்தை சுமப்பவர் சேஷன். அதனால் சேஷவாகனம் தாஸ்யபக்தியின் சான்றாகும். அந்த பக்தியால், அந்த தெய்வீகத்திலிருந்து, மிருகத்தன்மை நீங்கி, மனிதன் பின்னர் பரமபதத்தை அடைகிறான் என்பது ஐதீகம்.
திருமலை ஜீயர்கள் நாலாயிர திவ்யபிரபந்த பாடல்களை பாடி முன் செல்ல காளையும், குதிரையும், யானையும் மலையப்பஸ்வாமியின் வருகையை தெரிவிக்க ஆடல், பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுக்கிடையில் மாடவீதியில் மலையப்பஸ்வாமி எழுந்தருளினார். இதற்காக திருமலை முழுவதும் வண்ண வண்ண மின்விளக்குகளாலும் மலர்களாலும் செயற்கை நீரூற்றுகளால் அழகுற அலங்கரிக்கப்பட்டது.