காசிமேடு:காசிமேடில் ராட்சத குழாய் உடைந்ததால், பாமாயில் தயாரிக்க பயன்படும் கச்சா எண்ணெய் வெளியேறி, அப்பகுதியில் குளம் போல் தேங்கியது.
சென்னை துறைமுகத்திற்கு, வளைகுடா நாடுகளில் இருந்து கப்பல்கள் வாயிலாக கச்சா எண்ணெய் கொண்டு வரப்படுகிறது. பின் அங்கிருந்து, கச்சா எண்ணெய் குழாய்கள் வாயிலாக ராயபுரம், காசிமேடு, பழைய வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை வழியாக திருவொற்றியூர், மணலியில் உள்ள ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அந்த வகையில் துறைமுகத்திலிருந்து, பூமிக்கு அடியில் செல்லும் ராட்சத குழாய் வாயிலாக திருவொற்றியூர், தாங்கல் பகுதியிலுள்ள கே.டி.வி.சன்லேன் ஆயில் என்ற தனியார் நிறுவனத்திற்கு, பாமாயில் தயாரிக்க பயன்படும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. நேற்று அதிகாலை, காசிமேடு மீன்பிடி பகுதியில், படகு பழுது பார்க்கும் இடம் அருகே, ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் வெளியேறியது. 1000 லிட்டர் அளவிற்கு வெளியேறியதால், அப்பகுதியில் 70 மீட்டர் வரை தேங்கி, குளம் போல் காட்சிஅளித்தது.
இதுகுறித்து மீனவர்கள் காவல் நிலையம், எண்ணெய் நிறுவனத்திற்கு தகவல் அளித்தனர். இதன்படி, எண்ணெய் நிறுவன ஊழியர்கள் வந்து, எண்ணெய் கசிவை சரி செய்தனர். பின், மோட்டார் வாயிலாக கச்சா எண்ணெயை அப்புறப்படுத்தும் போது, சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில் மீனவர்கள், கச்சா எண்ணெய் கடலில் கலந்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.இதன் பின், மீனவர்களிடம் சமரசம் பேசி, பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், கச்சா எண்ணெயை வாளிகளில் அள்ளி 'பேரல்'களில் நிரப்பி அப்புறப்படுத்தினர்.
சம்பவ இடத்தில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். 'அப்போது, 'கச்சா எண்ணெய் மண்ணில் கலந்துள்ள ஆழம் குறித்து ஆய்வு செய்து, அதன் பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். இதுகுறித்து, அனைத்து மீனவர் சங்க தலைவர் நாஞ்சில் ரவி, காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.