சென்னை, :தொண்டையில் கொட்டை சிக்கியதால் அவதிப்பட்ட 7 வயது சிறுமிக்கு, ராமச்சந்திராவில் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது.போரூர், ராமச்சந்திரா மருத்துவமனையின் குழந்தைகள் அறுவை சிகிச்சை தலைவர் பிரகாஷ் அகர்வால் கூறியதாவது:சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த தினக்கூலி செய்யும் பெண்ணின் 7 வயது பெண் குழந்தை, மூச்சுத்திணறும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தாயிடம் விசாரித்ததில், சில உணவு கொட்டைகளை வைத்து விளையாடியது தெரிந்தது.
குழந்தைக்கு மூச்சு பிரச்னையால், ஆக்சிஜன் அளவு 40 சதவீதத்திற்கு கீழ் குறைந்த நிலையில், உடனடியாக, 'ப்ராங்காஸ்கோபி' வாயிலாக, தொண்டை குழாயில் சிக்கியிருந்த கொட்டை, 30 நிமிடத்திற்குள் அகற்றப்பட்டது.இதனால், சிறுமியின் உயிர் காப்பாற்றப்பட்டது. மேலும், பெற்றோர் ஏழை என்பதால், எவ்வித கட்டணமும் இல்லாமல் சிகிச்சை அளிக்கப்பட்டது.காற்றுக் குழாயில் வெளி பொருட்கள் அடைத்துக் கொண்டால், உயிர் இழப்பு ஏற்படலாம். மூச்சு விடுதல் தடைபடுவதால், சிகிச்சைக்கு காலதாமதம் ஏற்படின், சில நேரம் நுரையீரலில் வெடிப்பு ஏற்படலாம்.
நான்கு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு கொட்டைகள், பருப்புகள் ஆகியவற்றை முழுமையாக கொடுக்கக் கூடாது. குழந்தைகள் அவற்றை அப்படியே விழுங்கி விடுவர்.அவை காற்று குழாயில் அடைப்பு ஏற்படுத்தி, உயிர் இழப்பு ஏற்படுத்தும். எனவே, குழந்தை வளர்ப்போர் கவனமாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.