வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : கல்விக்காக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்ற விதியில் இருந்து, ஈஷா அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோவை ஈஷா அறக்கட்டளைக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், 2021 நவம்பரில், 'நோட்டீஸ்' அனுப்பியது. விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதற்காக, ஏன் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு, விளக்கம் அளிக்கும்படி, அந்த நோட்டீசில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, நோட்டீசை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ஈஷா அறக்கட்டளை வழக்கு தொடர்ந்தது.
![]()
|
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நோட்டீஸ் தொடர்பான நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்தது. இவ்வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி கிருஷ்ணகுமார் முன், விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'கல்வி நோக்கத்துக்காக கட்டடங்கள், மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளன. இதற்கு, சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்ற விதியில் இருந்து, ஈஷா அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.
அதைத்தொடர்ந்து, விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்த முதல் பெஞ்ச், விதி விலக்கு அளிக்கும் பிரிவின் கீழ், அறக்கட்டளையின் கட்டடங்கள் எப்படி கொண்டு வரப்பட்டன என்பதற்கு விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டது.