அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி:
ஜெயலலிதா ஆட்சியில் யாராவது இப்படி பேசினால், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து இருப்பார். ஹிந்து மதத்தை இழிவுபடுத்திய ஆ.ராஜாவை, குண்டர் சட்டத்தில் ஸ்டாலின் அடைத்திருக்க வேண்டும். முதல்வர், விருப்பு வெறுப்பு இல்லாதவர் என்பதை நிரூபிக்க, ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்வாரா?
'விருப்பு, வெறுப்பு இல்லாதவர் முதல்வர்' என நீங்களாக நினைத்து கொண்டால், அதற்கு அவர் பொறுப்பாக முடியுமா?
ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை:
'சேற்றில் மூழ்கி எழுந்து வரும் உருவம், தன் உடலை சிலுப்புகிறது என்று, ஆற்றில் நீராடி வரும் நாமும் அதன் முன் சிலுப்பிக் கொண்டிருக்க முடியாது. நாம் சற்று ஒதுங்கிப் போய், நம் பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டி இருக்கிறது' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அவசர கோலத்தில், முதல்வர் வார்த்தைகளை அள்ளித் தெளிக்க வேண்டாம். பேசிய வார்த்தை என்பது, இரண்டு பக்கமும் கூர் உள்ள கத்தி. இதை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த மாதிரி, 'ரைமிங்'காக பேச முதல்வரின் தந்தை கருணாநிதியால் தான் முடியும்... அதனால, முதல்வருக்கு உரை எழுதி கொடுத்தவர் தான், இதை புரிந்து கொள்ள வேண்டும்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை:

டெல்டா மாவட்டங்களில், மழையால் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், 50 சதவீதத்திற்கும் மேலாக திறக்கப்படாமல் இருக்கிற நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து, விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, காலதாமதமின்றி கொள்முதல் செய்ய, தி.மு.க., அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீங்களும் தினமும் ஒரு அறிக்கை வெளியிடுறீங்க... அரசு கண்டுக்கிட்ட மாதிரியே தெரியலையே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை:
அ.தி.மு.க., ஆட்சியிலேயே தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், 'லேப் டாப்' வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டதாக, ஒரு தவறான தகவலை, தமிழக நிதி அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தாமதமாக வழங்கியதாலேயே, திட்டம் கைவிடப்பட்டு விட்டதாக கருதக்கூடாது. திரைத் துறையினருக்கு 10 ஆண்டுகளுக்கும் சேர்த்து, விருதுகள் வழங்கப்பட்டது போல, தி.மு.க., ஆட்சி மேற்கண்ட திட்டங்களை தொடரலாமே. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
மனமும், மார்க்கமும் இல்லாம தானே, சால்ஜாப்பு சொல்லிட்டு இருக்காங்க!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் அறிக்கை:
மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., ஆறாம் வகுப்பு வரலாற்று பாட புத்தகத்தில், 'வர்ணாசிரம முறை' என்ற தலைப்பிலான பாடத்தில் பிராமணர்கள், ஷத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என குறிப்பிடப்பட்டு, ஒவ்வொருவருக்குமான வேலைகள் வரையறுக்கப்பட்டுள்ளன; அதுகுறித்த கேள்விகளும் உள்ளன. பிஞ்சுக் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் இப்பாடம் அமைந்துஉள்ளது.
அப்படி ஒரு பாடத் திட்டம் இருந்தால், அது கண்டிப்பாக நீக்கப்பட வேண்டியதே!