ஈரோடு,: ஓட்டுனர் உரிமத்தை திரும்ப ஒப்படைக்க, 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ.,க்கு, மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து, ஈரோடு கோர்ட் தீர்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை போலீஸ் எஸ்.ஐ., சந்திரன், 58; கடந்த, 2009ல் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். டூவீலரில் வந்த அம்மாபேட்டை ஆதி திராவிடர் காலனி செல்லமுத்துவிடம், அசல் ஓட்டுனர் உரிமத்தை பெற்று கொண்டார். பின்னர் வந்து வாங்கி கொள்ளும்படி கூறியுள்ளார். திரும்ப சென்று கேட்டபோது, 500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
தர விரும்பாத அவர், ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை போலீசில், புகார் செய்தார். அவர்களின் திட்டப்படி, 2009 பிப்.,4ல், 500 ரூபாயை லஞ்சமாக தந்தார். அதைப் பெற்ற சந்திரனை, லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை ஈரோடு முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி சரவணன், நேற்று தீர்ப்பளித்தார். எஸ்.ஐ., சந்திரனுக்கு இரு பிரிவுகளில் தலா மூன்றாஆண்டு சிறை, 10 ஆயிரம் அபராதம் விதித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.