பனமரத்துப்பட்டி: சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியில் காய்கறி, பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. கம்மாளப்பட்டி, அடிக்கரை உள்ளிட்ட பகுதியில், தக்காளி அதிகளவில் பயிரிடப்படுகிறது.
கடந்த வாரம் பெய்த மழையால், செடியிலிருந்த பூக்கள் உதிர்ந்து, தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால், நேற்று முன்தினம், பனமரத்துப்பட்டி வாரச்சந்தையில், ஒரு கிலோ தக்காளி, 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து, விவசாயி தங்கவேல்
கூறியதாவது:
பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், தக்காளி உற்பத்தி குறைந்ததால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேச்சேரி, வாழப்பாடி, மெட்டாலா உள்ளிட்ட இடங்களிலிருந்து, தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அதனால், ஒரு கிலோ, 38 முதல் 40 ரூபாய் வரை விற்பனையாகிறது. மேலும், விலை உயர வாய்ப்புள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.