ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு, 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடகாவிலுள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் நிரம்பி, தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு, 5,000 கன அடியாக உள்ளது. இந்நிலையில், தமிழக மற்றும் கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், ஒகேனக்கல் காவிரியாற்றுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 9,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள சினி பால்ஸ், மெயின் பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர்பாணி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று, காவிரியாற்றின் எழில்மிகு அழகை கண்டு ரசித்தனர். நீர்வரத்து அதிகரிப்பின்போது மெயின் பால்ஸ் மற்றும் சினி பால்ஸ் சேதமடைந்ததால், தொடர்ந்து குளிக்க தடை தொடர்கிறது.