தர்மபுரி: பென்னாகரத்தில் நிவாரணத்தொகை வழங்க லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தாருக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து, தர்மபுரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பூதிப்பட்டியை சேர்ந்த மாதன் - ராணி ஆகியோரின் மகன்கள் சித்தலிங்கம், பரமசிவம், 21; கடந்த, 2013- மார்ச், 10-ல் சேலம் மாவட்டம் அரியானுாரில் சித்தலிங்கம் நடத்தி வந்த சிக்கன் கடைக்கு சென்ற பரமசிவம், மின்சாரம் தாக்கி இறந்தார். அவரது தாயார் ராணி, சமூக பாதுகாப்பு திட்டத்தில் அரசு வழங்கும் விபத்து நிவாரணத்தொகை பெற, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மணிமேகலையை அணுகினார். அவர் ராணியிடம், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதில், 10 ஆயிரம் ரூபாயை, ராணி கொடுத்தார். மீத பணத்துக்கு ராணியின் ரேஷன் கார்டு, உழவர் பாதுகாப்பு அட்டைகளை பிணயமாக, தாசில்தார் கேட்டு பெற்றார்.
அதன் பின், நிவாரணத்தொகையை பெற்ற ராணி, தாசில்தாரிடம் ரேஷன் கார்டு, உழவர் பாதுகாப்பு அட்டையை கேட்டபோது, மீதமுள்ள, 10 ஆயிரம் ரூபாயை கொடுத்தால் தருவதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து ராணி, தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழங்கிய ரசாயனம் தடவிய, 7,000 ரூபாயை தாசில்தாரிடம் ராணி அளித்தார். அப்போது போலீசார் தாசில்தார் மணிமேகலையை கைது செய்தனர்.
இந்த வழக்கு, தர்மபுரி மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், தாசில்தார் மணிமேகலைக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை மற்றும், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று
நீதிபதி தீர்ப்பளித்தார்.