மறைமலை நகர்:சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தில், பிரசித்திபெற்ற அகோர வீரபத்திரர் கோவில் உள்ளது. இங்கு, மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, மகா சிவராத்திரி ஆகிய நாட்களில் 500க்கும் மேற்பட்ட உள்ளூர், வெளியூர் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கோவிலின் வாயிலுக்கு எதிரே, பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் குளம் உள்ளது. குளத்தை சுற்றி 2013ல் சுவர் கட்டப்பட்டது. சுவரின் மூன்று இடங்களில் உடைந்து மோசமான நிலையில் குளம் உள்ளது.கிராம மக்கள் கூறியதாவது:குளத்தைச் சுற்றி 8 ஆண்டுகளுக்கு முன், பக்தர்கள் இறங்கி நீராட வழி வைக்கப்பட்டது.
பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய நாட்களில், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், மேலும் இரண்டு இடங்களில் செல்வதற்காக சுற்றுச்சுவரை உடைத்து வழி ஏற்படுத்தப்பட்டது.சுவர் உடைப்பு குறித்து கேட்டதற்கு, அவ்வழியில் இரும்பு கதவு வைக்கப்படும் என, ஊராட்சி நிர்வாகத்தினர் கூறினர்.
தற்போது வரை கதவு அமைக்காததால், சிறுவர்கள், கால்நடைகள் அவ்வழியே சென்று குளத்து நீரில் விழுந்து மூழ்கும் அபாயம் உள்ளது.வழி ஏற்படுத்தப்பட்ட இடத்தில் இரும்பு கதவு அமைத்து, சுவருக்கு வண்ணம் தீட்ட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.