சிவகங்கை:'தோண்ட தோண்ட புதிய வரலாற்று தடயங்களுடன், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சங்கரபதிகோட்டை விளங்குகிறது' என கள ஆய்வு செய்த காரைக்குடி வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இக்கோட்டையின் வெளிவராத பெருமைகள் குறித்து காரைக்குடி அழகப்பா அரசு கல்லுாரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ஜோ.மார்டின் ஜெயப்பிரகாஷ், பேராசிரியர் தி. பாலசுப்பிரமணியன் கூறியதாவது:
காரைக்குடி - தேவகோட்டை ரோட்டில் 4 கி.மீ.,யில் வரலாற்றை புதைத்திருக்கும் கோட்டை தான் சங்கரபதிகோட்டை. அழிவின் விளிம்பில் இருக்கும் இக்கோட்டையை பாதுகாக்க வேண்டியது அவசியம்.இக்கோட்டையின் ஒரு பகுதி இந்தோ - இஸ்லாமிக் கட்டட கலையை கொண்ட அரண்மனையாக உள்ளது. நுழைவு வாயில், மண்டபம், தர்பார் போன்ற அமைப்புகளால் வடிவமைத்துள்ளனர்.
கடந்த 1746ல் செல்ல முத்து சேதுபதியின் மகள் வேலு நாச்சியாரை சிவகங்கை சீமை மன்னர் முத்து வடுகநாதருக்கு திருமணம் முடித்து கொடுத்து சீதனமாக ராமநாதபுரம் மன்னர் இக்கோட்டையை சிவகங்கைக்கு வழங்கினார்.
வேலுநாச்சியார் தலைமை பிரதானி தாண்டவராயன் பிள்ளை, மாவீரர்கள் மருதுபாண்டியர்களுடன் மைசூரு மன்னர் ஹைதர் அலியின் உதவியை பெற்று 1780ல் சிவகங்கை சீமையை மீட்டு ஆங்கிலேயர்களை பழிதீர்த்தார்.தொடர்ந்து படைகளின் பயிற்சிக்கு பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்ததில் பீரங்கி பயிற்சிக்கு பிரான்மலை, யானை மற்றும் குதிரை பயிற்சிக்கு தேவையான கோட்டை கட்டப்பட்டது.
இங்கு வீரர்களுக்கு போர் பயிற்சி அளிக்க ஹைதர்அலி படையில் இருந்து 'சங்கரபதி' என்பவரை நியமித்தனர். இதனால் இது சங்கரபதி கோட்டை என்றானது. ஆங்கிலேயருடன் போரிட்டபோது பயன்படுத்திய குண்டுகள் இன்றைக்கும் இங்கு சிதறி கிடக்கின்றன.கடந்த 1800, 1801ல் மதுரையில் இருந்து திருப்புத்துார் வழியாகவும், தஞ்சாவூரில் இருந்து காரைக்குடி, காளையார்கோவில் வழியாகவும் ஆங்கிலேயர்கள் சிவகங்கையை தாக்கினர்.ஆங்கிலேய தளபதி மேக்கிலின் தலைமையில் ஆங்கிலேய படைகள் தஞ்சாவூரில் இருந்து காரைக்குடி வழியாக வரும்போது சங்கரபதி கோட்டையில் இருந்த வீரர்களை தாக்கினர்.
இதில் சங்கரபதி கோட்டை குண்டுகளால் துளைக்கப்பட்டது.கோட்டையின் வடக்கு பகுதியில் குளக்கரையில் செம்பூரான் கல் வட்டங்கள்' உள்ளன. இவை பொதுவாக இறந்தவர்களுக்காக அமைக்கப்படுவது. இரு கல் வட்டங்கள் உயர்ந்த பதவியில் இருந்த வீரர்களுக்காக கட்டப்பட்டிருக்கலாம்.கல் வட்டம் 8 அடுக்குகள் அகலம், 3 அடுக்குகளை கொண்ட கற்களால் கட்டப்பட்டுள்ளன. கோட்டையின் மேற்கு பகுதியில் இருந்து தெற்கு நோக்கி அமைந்துள்ள சுரங்கப்பாதை 5 கி.மீ., துாரமுள்ள கல்லுவயல், அங்கிருந்து 5 கி.மீ., துாரமுள்ள தென்னிவயலில் சுரங்கப்பாதை வெளியேறுவது போல அமைத்துள்ளது.இவ்வாறு தெரிவித்தனர்.
முனைவர் பட்ட ஆய்வாளர் ஜெயசீலன், ஆய்வாளர்கள் சம்பத்லிங்கம், கனிகாதேவி, கிருஷ்ணகுமார், ஜெகத்ரட்சகன், தினேஷ்குமார், செல்வபதி, வருண்குமார், கார்த்திகா ஆய்வில் பங்கேற்றனர்.