சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

மானத்தை வாங்கிய பஞ்சாப் முதல்வர்!

Updated : செப் 29, 2022 | Added : செப் 28, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
ரா.சேது ராமானுஜம், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆம் ஆத்மி' கட்சியைச் சேர்ந்த, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மது குடித்து விட்டு பொற்கோவிலுக்குள் நுழைந்ததாக முதலில் குற்றச்சாட்டு கூறப்பட்டது. பின், அவரது வீட்டு குப்பை கழிவுகளை தெருவில் போட்டதால், மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது, இரண்டாவது குற்றச்சாட்டு. இந்நிலையில், சில

இது உங்கள் இடம்

ரா.சேது ராமானுஜம், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆம் ஆத்மி' கட்சியைச் சேர்ந்த, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மது குடித்து விட்டு பொற்கோவிலுக்குள் நுழைந்ததாக முதலில் குற்றச்சாட்டு கூறப்பட்டது. பின், அவரது வீட்டு குப்பை கழிவுகளை தெருவில் போட்டதால், மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது, இரண்டாவது குற்றச்சாட்டு. இந்நிலையில், சில தினங்களுக்கு முன், குடித்து விட்டு முழு போதையில் தள்ளாடியபடி, விமானத்தில் பயணிக்க இருந்த இவர், சக பயணியரின் வற்புறுத்தலால், விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டார் என, எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல மூன்றாவது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இவரின் அநாகரிக செயல், ஆம் ஆத்மி கட்சி, அவரை முதல்வராக்கிய கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், இவருக்கு ஓட்டு போட்ட பஞ்சாப் மக்களுக்கு மட்டுமின்றி, நாட்டிற்கே பெருத்த அவமானம் மற்றும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநில தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதும் கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால், 'எதிரிகள் எங்களை புதைக்க நினைத்தனர். அவர்களுக்குத் தெரியாது... நாங்கள் விதைகள் என்று' என கர்ஜித்தார். ஆனால், ஆம் ஆத்மியை வரும் தேர்தல்களில் தோற்கடிக்க, அக்கட்சியை குழி தோண்டி புதைக்க எதிரிகளே தேவையில்லை; பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஒருவரே போதும். பகவந்த் மான், சினிமாவில் வேண்டுமானால் காமெடி நடிகராக இருக்கலாம். ஆனால், அரசியலில் இவர் கெஜ்ரிவாலுக்கு வில்லனாக மாறுவது நிச்சயம். இவரை, பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கி, வேறு ஒரு நல்ல நபரை முதல்வர் பதவியில் அமர்த்த, கெஜ்ரிவால் தைரியமாக முன்வர வேண்டும்.இல்லையெனில், வரும் சட்டசபை தேர்தல்களில், ஆம் ஆத்மி கட்சி மண்ணை கவ்வும் என்பது உறுதி.
இணைய வழி பட்டா மாற்றம் ஏமாற்றமே!கோ.பாண்டியன், காவல் துணை கண்காணிப்பாளர் - பணி நிறைவு, செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இணைய வழி சேவை வாயிலாக, பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் துவக்கி வைத்தார். இந்த சேவையின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதற்கு, என் அனுபவத்தை, 'தினமலர்' வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...நான், அரியலுார் மாவட்டம், தேவமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவன். தகப்பனார் சுயமாக சம்பாதித்த நிலங்களை, உயில் சாசனம் வாயிலாக எனக்கு வழங்கி உள்ளார். தந்தை இறந்த பின், அவர் எழுதி வைத்த உயிலின் அடிப்படையில், எனக்கான நிலங்களுக்கு தனிப்பட்டா வழங்க கோரி, உடையார்பாளையம் வட்டாட்சியருக்கு, 2020ல் மனு அளித்தேன்; ஆனால், எனக்கு பட்டா வழங்கவில்லை. பட்டா கிடைக்காததால், உயர் அதிகாரிகளிடம் தபால் வாயிலாகவும், நேரடியாகவும், ஜமாபந்தி எனப்படும், வருவாய் தீர்ப்பாயத்திலும் பல முறை முறையீடு செய்தேன்; பலனில்லை. இணைய வழி சேவை மையம் வாயிலாகவும் விண்ணப்பித்திருந்தேன். இணைய வழியாக மனு செய்தாலும், வேண்டுமென்றே நிராகரித்து விடுகின்றனர்; அதற்கான காரணத்தையும் தெரிவிப்பதில்லை. இதனால், பட்டா வாங்க முடியாத நிலைக்கு, இன்று வரை தள்ளப்பட்டு உள்ளேன்.காவல் துறையில் கண்ணியமான முறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நான், ஓய்வூதியத்தில் வாழ்க்கை நடத்துவதால், வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க பணமும் இல்லை; மனமும் இல்லை. லஞ்சம் கொடுக்காத காரணத்தாலும், பட்டா மாற்றம் செய்து தராமல், வருவாய்த் துறையினர் இழுத்தடிக்கின்றனர். இணைய வழி சேவை என்ன, எந்த வகையான சேவையை ஏற்படுத்தி தந்தாலும், லஞ்ச பேர்வழிகள் நிர்வாகத்தில் இருக்கும் வரை, ஒரு ஆணியை கூட அகற்ற முடியாது என்பது தான் நிதர்சனம். வருவாய்த் துறையில் பட்டா மாறுதல், ஜாதி சான்று, வருமான சான்று போன்றவற்றை, 'லஞ்சம் கொடுக்காமல் பெற்றேன்' என்று, யாராவது ஒருவரால் கூறமுடியுமா? லஞ்சம் வாங்கி பிடிபடும் வருவாய்த் துறை அதிகாரிகள் பற்றி, 'அடங்க மாட்றாங்கய்யா' என்ற தலைப்பில், நம் நாளிதழில், செய்திகள் வராத நாளே இல்லை என்ற நிலைமை உள்ளது.

அரசின் திட்டங்கள் எளிதாகவும், விரைவாகவும் மக்களை சென்றடையவும், லஞ்சத்தை ஒழிக்கவும், அரசு பணிகளில் முறைகேடுகளை தவிர்க்கவுமே, அரசு மக்களுக்கு இணையதள சேவை வசதிகளை ஏற்படுத்தி தருகிறது. என்ன தான் இணைய வழி சேவையை அரசு ஏற்படுத்தி தந்தாலும், லஞ்சம் வாங்குவது நின்று விடவில்லை; குறைந்து விடவுமில்லை. 'அமைச்சர்களும், அதிகாரிகளும் ஒழுங்காக பணி செய்யவில்லை என்றால், சர்வாதிகாரியாக மாறுவேன்; சாட்டையை கையிலெடுப்பேன்' என்றெல்லாம், முதல்வர் ஸ்டாலின் மேடைகள் தோறும் 'பீலா' விட்டு வருகிறார். அந்த முதல்வர், வருவாய்த் துறை பக்கமும் சாட்டையை சுழற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு. இல்லையெனில், இணைய வழி பட்டா மாற்றம் என்பது, எல்லாருக்கும் ஏமாற்றமாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.

புண்ணிய பூமியாக தொடர வேண்டும்!க.ஸ்ரீதர், கல்லிடைக்குறிச்சி, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் கோவையை தொடர்ந்து பல இடங்களில், பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில், பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு, கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் தீக்கிரையாகி வருகின்றன. பா.ஜ., கட்சி மீது, 'பாசம்' வைத்துள்ள ஒரு பிரிவினர், இந்த பாதகச் செயல்களை செய்து வருகின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன், கோவையில் தேர்தல் பிரசாரத்திற்கு, பா.ஜ., தலைவர்களில் ஒருவரான அத்வானி வந்த போது, வரலாறு காணாத வகையில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது; பல உயிர்கள் பலியாகின. இந்த குண்டு வெடிப்பு நிகழ்வில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் அத்வானி. அதே போன்ற ஒரு சூழ்நிலை, தற்போதும் உருவாகி உள்ளது. தமிழகத்தில் பா.ஜ., காலுான்றுவது, பல அரசியல் கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. அதையே, தற்போதைய வன்முறை சம்பவங்கள் காட்டுகின்றன.

சமீபத்தில் தமிழகம் வந்த பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 'தமிழகம் புண்ணிய பூமி' என்று புகழாரம் சூட்டினார். அவர் இப்படி சொன்ன சில தினங்களிலேயே, கலவர பூமியாக மாறிக் கொண்டிருக்கிறது. மாநில அரசின் ஆதரவுடன், சில பிரிவினர் செய்யும் இந்த அடாவடிகளையும், சட்ட அத்துமீறல்களையும், மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அது, தன் கடமையை செய்ய வேண்டிய நிலை உருவானால், தி.மு.க., அரசு பல பிரச்னைகளை

எதிர்கொள்ள நேரிடும். எனவே, மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற வேண்டியது, ஸ்டாலின் அரசின் கடமையாகும். தமிழகம் புண்ணிய பூமியாகவே இருக்க வேண்டும்; கலவர பூமியாக மாற வேண்டாம். அதுவே

எல்லாருக்கும் நல்லது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
29-செப்-202222:16:21 IST Report Abuse
Anantharaman Srinivasan பாண்டியா நேர்மையாக விண்ணப்பித்து பட்டா பெறுவது நடக்காது.. மேடையில் பேசுவதும், G O வருவதும் மக்களை ஏமாற்றவே.. பெரியலெவெல் சிபாரிசு இருந்தால் வேண்டாவெறுப்புமாக செய்து தருவார்கள்.. மத்தபடி பணம்தான்.. முதலமைச்சருக்கே register post அனுப்பினாலும் பலனிருக்காது.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
29-செப்-202221:34:36 IST Report Abuse
NicoleThomson பகவத் மான் கலக்கிட்டாரு இல்லையா கெஜ்ரிவால்
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
29-செப்-202219:43:02 IST Report Abuse
madhavan rajan அது மட்டுமின்றி அவர் BMW பாகங்கள் தயாரிக்கும் கம்பெனி முதலீடு பஞ்சாப் மாநிலத்திற்கு வருகிறது என்று அறிக்கைவிட்ட சில மணி நேரத்திலேயே அந்த கம்பெனி அப்படி ஒன்றும் திட்டம் எங்களிடம் இல்லை என்று மறுப்பு வெளியிட்டிருப்பது மேலும் அவமானகரமான விஷயமாகும். திராவிட மாடலை காப்பி அடித்து இலவசங்கள் அறிவித்தே பல மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று அந்த கட்சி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X