செப்டம்பர் 29, 1912 -
தேனி மாவட்டம் சின்னமனுாரில், சுப்பிரமணியன் மகனாக, 1912ல், இதே நாளில் பிறந்தவர் சி.சு.செல்லப்பா. இவர், தன் தாய் மாமாவின் ஊரான வத்தலக்குண்டில் வளர்ந்தார். மதுரை கல்லுாரியில், பி.ஏ., படித்த போது, காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். எழுத்து ஆர்வத்தால், 'சுதந்திரச் சங்கு, மணிக்கொடி' இதழ்களில் எழுதினார்; 'சரசாவின் பொம்மை' என்ற சிறுகதையால் புகழடைந்தார்.
பின், 1937ல் சென்னை வந்த சி.சு.செல்லப்பா, மீனாட்சி என்பவரை மணந்தார். தொடர்ந்து, 'தினமணி' கதிரில், எழுத்தாளர் துமிலனுக்கு உதவியாக இருந்தார். அதன்பின், 'எழுத்து' என்ற பத்திரிகையை துவங்கினார்; அதன் வாயிலாக, விமர்சன தமிழை வளர்த்தார். அத்துடன், வெங்கட்சாமிநாதன், பிரமீள், ந.முத்துசாமி உள்ளிட்ட எழுத்தாளர்களையும் வளர்த்தார்.இவர் எழுதிய, 'வாடிவாசல், சுதந்திர தாகம், ஜீவனாம்சம்' உள்ளிட்ட நாவல்கள், தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படுகின்றன. நாவல், கவிதை, கட்டுரை உள்ளிட்ட, 29 நுால்களை எழுதியுள்ள சி.சு.செல்லப்பா, 1998 டிசம்பர் 18ல், தன், 86வது வயதில் மறைந்தார். 'விளக்கு, சாகித்ய அகாடமி' உள்ளிட்ட விருதுகளை பெற்றவர்.'எழுத்து' பிரசுரம் துவங்கி, 56 நுால்களை வெளியிட்டவரின் பிறந்த தினம் இன்று!
Advertisement