வடலுார் : வடலுார் நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக வடலுார் உள்ளது. குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.இங்கு, வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளதால், இந்திய அளவிலும், உலக அளவிலும் அதிகளவில் சன்மார்க்கத் தொண்டர்கள் வருகின்றனர். தைப்பூசத்தின்போது பல லட்சம் மக்களும், மாதப் பூசத்தின்போது பல ஆயிரம் பக்தர்களும் குவிகின்றனர்.
மேலும், நகரில் 2 தொழிற்சாலைகள், சிட்கோ தொழிற்பேட்டை, அரசு போக்குவரத்து பணிமனை, வாரச்சந்தை, அரசு கலைக் கல்லுாரி, தனியார் கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வங்கிகள், பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு, தனியார் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.மேலும், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் ஜவுளிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்கவும், அத்தியாவசிய தேவைகள் உள்ளிட்ட அனைத்துக்கும் வடலுார் நகருக்கு தினமும் வந்து செல்கின்றனர்.
விக்கிரவாண்டி- கும்பகோணம், கடலுார்- சேலம் ஆகிய இரு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் இவ்வூர் வழியாக செல்கிறது.நாள் ஒன்றுக்கு வடலுார் வழியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் செல்கின்றன. மேலும், ரயில் நிலையம் இருப்பதாலும், பயணிகள் அதிகம் வருகின்றனர்.இதனால், வடலுார் நகரம் வாகன நெரிசலும், மக்கள் நடமாட்டமும் மிகுந்த நகராகவே காணப்படுகிறது. வடலுார் நான்குமுனை சந்திப்பு சாலையில் எப்போதும் அதிகமான போக்குவரத்து நெரிசல் உள்ளது.
இந்நிலையில், வடலுார் நகரில் அனைத்து சாலைகளிலும் இரு புறமும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது.குறிப்பாக, பண்ருட்டி சாலையின் ஒரு புறத்தில் அதிக அளவில் இரு சக்கர வாகனங்களும், மறுபுறத்தில் அதிக எண்ணிக்கையிலான கார்களும் தாறுமாறாக நிறுத்தப்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.அந்த வழியாக செல்லும் பொது மக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சாலையோரம் குறிப்பிட்ட இடத்தில் கயிறு அமைத்து அதற்குள் தான் இருசக்கர வாகனங்களை நிறுத்த வேண்டும் என போலீசார் கட்டுப்பாடுகளை விதித்தனர். ஆனால், யாரும் அதை பின்பற்றுவதில்லை. போலீசாரும் இதனை கண்டு கொள்வதில்லை. வடலூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, நான்கு முனை சந்திப்பு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இருசக்கர வாகனங்கள், கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களை கண்ட இடங்களில் தாறுமாறாக நிறுத்தாமல், முறையாக பார்க்கிங் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Advertisement