சென்னை:தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆந்திர கடலோர பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்யும்.
சென்னையில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும். அதிகபட்சம் 27 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக, வேதாரண்யத்தில் 6 செ.மீ., மழை பெய்துள்ளது. பொன்னேரி, பேரையூர், 4; கும்மிடிப்பூண்டி, திருவாரூர், கொள்ளிடம், திருக்குவளையில் 3 செ.மீ., மழை பெய்து உள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய தமிழக தென் கடலோர பகுதிகள் மற்றும் குமரி கடல் பகுதிகளில், மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் இன்று சூறாவளி வீசும். தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில், நாளை மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசும். எனவே, இன்றும், நாளையும் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.