சென்னை, ;சூளைமேடைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன், 55. இவர், 172வது வார்டில், குடிநீர் வாரிய களப்பணியாளராக பணி புரிந்தார்.கடந்த 26ம் தேதி பணி முடித்து, இரவு 7:30 மணிக்கு கிண்டியில் மின்சார ரயில் ஏறி உள்ளார்; ஆனால் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம் ரயில்வே போலீசார், ஹரிகிருஷ்ணன் இறந்து விட்டதாக அவரது வீட்டுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.பின், அரசு பொது மருத்துவமனையில் இருந்த அவரது உடல், பிரேத பரிசோதனைக்கு பின், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
விசாரணையில், மின்சார ரயிலில் ஏறியவர், மாரடைப்பால் இருக்கையில் சரிந்து இறந்துள்ளார். கடற்கரை சென்ற மின்சார ரயில், மீண்டும் தாம்பரம் சென்று கடற்கரை நோக்கி திரும்பியது. சக பயணியர், 'துாங்கி கொண்டிருக்கிறார்' என, விட்டுவிட்டனர்.சிலர் சந்தேகத்தால், ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது, மாரடைப்பால் இறந்தது தெரிய வந்துள்ளது.இதையடுத்து போலீசார் உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஹரிகிருஷ்ணனுக்கு சசிகலா என்ற மனைவியும், அசோக்குமார், 26, என்ற மகனும் உள்ளனர்.