பால்கர், :மஹாராஷ்டிராவில், காதலியை நேற்று பட்டப்பகலில் சுட்டுக் கொன்ற இளைஞர், தானும் வாகனத்தின் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பால்கர் மாவட்டத்தின் பாய்சர் நகரில் உள்ள சாலையில் நேஹா மஹதோ, ௨௧, என்ற இளம்பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஸ்ரீகிருஷ்ண யாதவ், ௨௬, என்ற இளைஞர், திடீரென நேஹாவை சுட்டார்.
இதில், அப்பெண் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். பின், அந்த இளைஞர் அவ்வழியே வந்து கொண்டிருந்த சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வாகனத்தின் முன், தற்கொலை செய்வதற்காக குதித்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை, போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அப்பெண் காதலிக்க மறுத்ததால், இளைஞர் துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.