பெங்களூரு-கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் வீடுகள் மற்றும் பண்ணையில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தி, சொத்துக்களை ஆய்வு செய்தனர்.கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், வருமானத்துக்கு அதிகமாக, 74.93 கோடி ரூபாய் சொத்து சேர்த்தது தொடர்பாக, வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சி.பி.ஐ., என மூன்று விசாரணை அமைப்பினர் விசாரிக்கின்றனர்.இந்நிலையில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று திடீரென ராம் நகரின் கனகபுராவுக்கு வந்தனர். கனகபுராவில் உள்ள சிவகுமாரின் வீடு, தொட்டஹாலஹள்ளியில் உள்ள வீடு, சந்தேகோடிஹள்ளியில் உள்ள பண்ணை வீடு ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.வீடுகளில் இருந்த ஆவணங்கள் அனைத்தையும் பரிசீலனை செய்தனர். பின், தாசில்தார் உதவியுடன், சிவகுமார் குடும்பத்தினருடைய சொத்துக்களை நேரில் சுற்றி பார்த்து ஆய்வு செய்தனர்.'பாரத் ஜோடோ' யாத்திரைக்காக, ராகுல் நாளை கர்நாடகாவின் குண்டுலுபேட் வருவதால், சிவகுமார் அங்கு சென்றிருந்தார்.நேற்று இரவு பெங்களூரு திரும்பிய சிவகுமார் கூறுகையில், ''அனைத்து மத்திய விசாரணை அமைப்பினருக்கும் என் மீது அதிக பாசம். அதனால் தான் அடிக்கடி என் வீட்டுக்கு வந்து செல்கின்றனர். சி.பி.ஐ.,யிடம் ஏற்கனவே அனைத்து சொத்து ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளேன்,'' என்றார்.