போபால்: மத்திய பிரதேசத்தில், பிறந்து 16 நாட்களே ஆன இரட்டை ஆண் குழந்தைகளை கழுத்தை நெரித்துக் கொன்ற இளம்பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.
ம.பி.,யின் போபால் நகரில் வசிப்பவர் சப்னா தாகத், 27. இவருக்கு திருமணமாகி, 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், 16 நாட்களுக்கு முன், இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. கடந்த 23ம் தேதி இரு குழந்தைகளையும் காணவில்லை என அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்த போது, சப்னா வின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.
அவரிடம் தீவிரமாக விசாரித்த போது, ''கணவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி வேலைக்கு செல்வதில்லை என்பதால், இந்தக் குழந்தைகளை எப்படி காப்பாற்றுவாய் என மாமியார் கேலி செய்தார். இதனால் கோபத்தில் இரு குழந்தைகளையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டேன்,'' என சப்னா ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
காதலியை சுட்டுக் கொன்று இளைஞர் தற்கொலை
பால்கர்: மஹாராஷ்டிராவில், காதலியை நேற்று பட்டப்பகலில் சுட்டுக் கொன்ற இளைஞர், தானும் வாகனத்தின் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மஹாராஷ்டிராவில், பால்கர் மாவட்டத்தின் பாய்சர் நகரில் உள்ள சாலையில் நேஹா மஹதோ, 21, என்ற இளம்பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஸ்ரீகிருஷ்ண யாதவ், 26, என்ற இளைஞர், திடீரென நேஹாவை சுட்டார். இதில், அப்பெண் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். பின், அந்த இளைஞர் அவ்வழியே வந்து கொண்டிருந்த சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வாகனத்தின் முன், தற்கொலை செய்வதற்காக குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை, போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அப்பெண் காதலிக்க மறுத்ததால், இளைஞர் துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பஸ் - லாரி மோதல்: 8 பேர் பலி
லக்கிம்பூர் கெரி: உத்தர பிரதேசத்தில், லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் தவுர்ஹரா என்ற இடத்தில் இருந்து, லக்னோ நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ், சிறிய லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில், எட்டு பேர் உயிரிழந்தனர்; 14 பேர் பலத்த காயம் அடைந்தனர். 'பலத்த காயமடைந்தவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்' என போலீசார் தெரிவித்தனர்.
![]()
|
மழைக்கு வீடு இடிந்து 4 குழந்தைகள் பலி
ஜெய்பூர்: ராஜஸ்தானில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையில் வீடு இடிந்து விழுந்ததில், துாங்கிக் கொண்டிருந்த நான்கு குழந்தைகள் பலியாகினர்; தாயும், மற்றொரு குழந்தையும் பலத்த காயமடைந்தனர்.
ராஜஸ்தானில், தோல்பூர் மாவட்டத்தின் மனியா நகரில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில், ஒரு பழைய வீடு இடிந்து விழுந்தது. அப்போது, அந்த வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த தாய் மற்றும் அவரது ஐந்து குழந்தைகளும் இடிபாடுகளில் சிக்கினர். இந்த விபத்தில், 2 முதல் 5 வயது வரையிலான மூன்று பெண் குழந்தைகள் மற்றும் நான்கு மாதமேயான ஆண் குழந்தை என நான்கு குழந்தைகள் சம்பவ இடத்தில் இறந்தன. தாய் மற்றும் ஒரு சிறுமி பலத்த காயமடைந்தனர். இவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடந்த நேரத்தில் குழந்தைகளின் தந்தை இல்லாததால், அவர் உயிர் தப்பினார்.
'பாய்லர்' வெடித்து 3 பேர் கருகி பரிதாப பலி
பால்கர் : மஹாராஷ்டிராவில், ஒரு ஆலையில் நேற்று 'பாய்லர்' வெடித்த விபத்தில், மூன்று தொழிலாளர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர்; எட்டு பேர் காயமடைந்தனர்.
மஹாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் வாசை என்ற பகுதியில், மின்சார உபகரணங்கள் தயாரிக்கும் ஆலை உள்ளது. இங்கு, நேற்று மதியம் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென பாய்லர் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. உடனே, தீயணைக்கும் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால், இந்த விபத்தில், மூன்று தொழிலாளர்கள் அடையாளம் தெரியாத வகையில் கருகி உயிரிழந்தனர். காயமடைந்த எட்டு பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தமிழக நிகழ்வுகள்:
விவசாயி நரபலி கொடுக்கப்பட்டாரா?
ஓசூர் : கெலமங்கலம் அருகே, குழிக்குள் இருந்து விவசாயி உடல் நேற்று மீட்கப்பட்டது. அவர் புதையலுக்காக நரபலி கொடுக்கப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம், பொம்மதாதனுார் அருகே புதுாரை சேர்ந்தவர் லட்சுமணன், 50; விவசாயி. இவர் மனைவி லட்சுமி, நான்கு ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு, சிவக்குமார், 35, நாகராஜ், 27, என்ற இரு மகன்கள். மகள் திருமணமாகி சென்று விட்டார். வீட்டின் அருகே தன் நிலத்தில், லட்சுமணன் வெற்றிலை தோட்டம் அமைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, வீட்டில் லட்சுமணன் மட்டும் தனியாக இருந்தார். நேற்று காலை வீட்டிற்கு வந்த மகன் சிவக்குமார், தந்தை வீட்டில் இல்லாததால், தோட்டத்தில் தேடினார்.
அப்போது, அங்கிருந்த 1 அடி ஆழ குழிக்குள் அமர்ந்த நிலையில் லட்சுமணன் இறந்து கிடந்தார். அவரது கையில் எலுமிச்சை பழம், குங்குமம் இருந்தது.குழியின் முன் மண்வெட்டி, தேங்காய், எலுமிச்சை, ஊதுபத்தி, குங்குமம் இருந்தன. சில அடி துாரத்தில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோழி உடல் கிடந்தது.புகார்படி கெலமங்கலம் போலீசார் உடலை மீட்டு விசாரித்தனர். புதையல் தோண்ட விவசாயி லட்சுமணன் நரபலி கொடுக்கப்பட்டாரா அல்லது அவரே தோட்டத்தில் குழி தோண்டியபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா என விசாரிக்கின்றனர். அப்பகுதியை சேர்ந்த உறவினர் ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. பிரேத பரிசோதனை முடிவு வந்த பின், அந்த நபரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
குண்டு வீசிய ரவுடி மீது தோட்டா பாய்ந்தது
ஸ்ரீபெரும்புதுார்: குண்டு வீசி தப்ப முயன்ற ரவுடியை, போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
![]()
|
சென்னை அடுத்த தாம்பரம் அருகே, சோமங்கலம் அடுத்த எருமையூரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சச்சின், 29. இவர் மீது, கொலை, கொலை முயற்சி, தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறித்தல் என, பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைமறைவாக இருந்த சச்சின், நடுவீரப்பட்டு அருகே, தனியார் பொறியியல் கல்லுாரிக்கு செல்லும் காட்டுப் பாதையில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சோமங்கலம் இன்ஸ்., சிவகுமார், காவலர் பாஸ்கர் ஆகியோர், நேற்று அதிகாலை 4:30 மணிக்கு அங்கு சென்றனர். போலீசார் வருவதை பார்த்த ரவுடி சச்சின், நாட்டு வெடிகுண்டை அவர்கள் மீது வீசினார். அந்த குண்டு வெடிக்காததால், போலீசார் தப்பினர். அங்கிருந்து தப்பியோட முயற்சித்த சச்சின், அவரது நண்பன் பரத், 28, ஆகிய இருவரை, காவலர் பாஸ்கர் மடக்கிப் பிடித்தார். அப்போது சச்சின் கத்தியால் பாஸ்கரை காலில் குத்தினார். தடுப்பு நடவடிக்கைக்காக இன்ஸ்., சிவகுமார், தன் துப்பாக்கியால் சச்சினை நோக்கி இரண்டு ரவுண்டு சுட்டார். அவரது முட்டி மற்றும் தொடையில் இரண்டு குண்டுகள் பாய்ந்தன. குண்டு அடிபட்டு விழுந்த சச்சினை பார்த்து, அவரது கூட்டாளி பரத் அங்கிருந்து தப்பினார்.
காவலர் பாஸ்கர், ரவுடி சச்சின் ஆகிய இருவரையும் மீட்ட இன்ஸ்., சிவகுமார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். சச்சினுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, சென்னை ராஜிவ் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.தாம்பரம் காவல் கமிஷனர் அமல்ராஜ், மருத்துவமனைக்கு சென்று காவலர் பாஸ்கரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
ரூ. 21 லட்சம் மோசடி: திருநங்கை கைது
திருச்சி: திருச்சியில், கட்டட கான்ட்ராக்டரிடம் 21 லட்சம் ரூபாய் மோசடி செய்த திருநங்கையை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம், சந்தைபேட்டை கனகனந்தல் பகுதியை சேர்ந்தவர் பபிதா ரோஸ், 30; திருநங்கை. திருச்சி மாவட்டம், வளநாடு அருகே உள்ள அ.புதுப்பட்டியில், அரண்மனை தோட்டம் அருகே புதிதாக வீடு கட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரை சேர்ந்த கட்டட கான்ட்ராக்டரான முருகேசன் என்பவர் வீடு கட்டிக் கொடுத்துள்ளார். மேலும், 10 லட்சம் ரூபாய் கடனாகவும் கொடுத்துள்ளார். இதனால் மொத்தம், 21 லட்சம் ரூபாய் தரும்படி, பபிதா ரோஸிடம் முருகேசன் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த பபிதா ரோஸ், தகாத வார்த்தைகளால் திட்டி, முருகேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது தொடர்பாக, முருகேசன் அளித்த புகார்படி, வளநாடு போலீசார், வழக்கு பதிவு செய்து, திருநங்கை பபிதா ரோசை நேற்று கைது செய்தனர்.
சிலிண்டர் வெடித்து 12 பேர் படுகாயம்
ஸ்ரீபெரும்புதுார்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத், தேவரியம்பாக்கத்தில், குடியிருப்புகள் நடுவே சிலிண்டர் கிடங்கு உள்ளது. ஊராட்சி தலைவர் அஜய்குமார் உறவினருக்கு கிடங்கு சொந்தமானதாக கூறப்படுகிறது. நேற்று இரவு 7:00 மணிக்கு, கிடங்குக்கு வந்த லாரியில் இருந்து சிலிண்டர்கள் இறக்கப்பட்டன. அப்போது ஏற்பட்ட கசிவால் தீப்பற்றி, சிலிண்டர்கள் வெடித்து சிதறின.
கொழுந்துவிட்டு எரிந்த தீயை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் தீயணைப்பு நிலையவீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரத்திற்கு பின், தீயில் சிக்கிய ஊழியர்கள், பக்கத்து வீட்டினர் என 12 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
மதுரையில் 80 சவரன் நகைகள் கொள்ளை
மதுரை: மதுரையில் ஓய்வுபெற்ற வணிக வரி உதவி கமிஷனர் வீட்டில் 80 சவரன் நகைகள் கொள்ளை போயின.
மதுரை, முத்துதேவர் காலனியைச் சேர்ந்தவர் மனோகரன், 67: பணி ஓய்வு பெற்ற இவர், குடும்பத்துடன் செப்., 22ல் சென்னை சென்றார். நேற்று மாலை வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவில் இருந்த 80 சவரன் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களை எஸ்.எஸ்.காலனி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழகத்திற்கு குட்கா சப்ளை: பெங்களூரு கோடீஸ்வரர் கைது
தூத்துக்குடி: தமிழகம் முழுவதும் பெருமளவில் குட்கா சப்ளை செய்த பெங்களூருவை சேர்ந்த கோடீஸ்வரர் சாமுவேல் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டது.
![]()
|
தமிழகத்தில் குட்கா, கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தென் மாவட்டங்களில் இத்தகைய போதை பொருள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களின் வங்கிக் கணக்கை முடக்க தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் 3 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள குட்கா கடத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்திற்கு இதனை சப்ளை செய்யும் நபர் பெங்களூரு சாமுவேல் ஜெயக்குமார் என்ற சாம் 50, என தெரியவந்தது.
தூத்துக்குடிஎஸ்.பி., பாலாஜி சரவணன் உத்தரவில் ரூரல் டி.எஸ்.பி.,சந்தீஷ் தனிப்படையினர் பெங்களூருவில் பின்னிபேட் பகுதியில் இருந்த சாம் ஜெயக்குமாரை கைது செய்தனர். சாம் எண்டர்பிரைசஸ், லேன்ட்ஸ்டார், செல்வி எண்டர்பிரைசஸ் போன்ற பெயர்களில் போலி கம்பெனிகள் ஏற்படுத்தி வங்கி கணக்குகள் மூலம் காய், கனி விற்பனை செய்வது போல குட்கா விற்பனை செய்து தெரியவந்தது. 16 லட்சம் ரூபாய் இருந்த அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டது. அவர் போலியான நிறுவனங்களுக்காக ஒரு கோடி ரூபாய் ஜி.எஸ்.டி.,வரி செலுத்தி இருப்பதும் தெரியவந்தது. கோடீஸ்வரரான சாமுவேல் ஜெயக்குமாரை கைது செய்து தனிப்படையினரை எஸ்.பி., பாராட்டினார்.
உலக நிகழ்வுகள்:
சீனாவில் தீ விபத்து: 17 பேர் பலி
பீஜிங்: சீனாவில், ஒரு ஹோட்டலில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில், 17 பேர் உயிரிழந்தனர்.
நம் அண்டை நாடான சீனாவின், ஜிலின் மாகாண தலைநகரான சாங்சுனில் ஒரு ஹோட்டல் உள்ளது. இங்கு, நேற்று மதியம் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு பணியில் இருந்த 17 பேர் பலியாகினர். காயமடைந்த மூன்று பேர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.