வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : பணிச்சூழலால், மகளின் நிச்சயதார்த்த நிகழ்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து, சிறப்பு எஸ்.ஐ.,க்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு கடிதம் எழுதியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் சிறப்பு எஸ்.ஐ.,யாக பணிபுரிபவர் சந்தானராஜ். இவர், இரு தினங்களுக்கு முன், 'ஆடியோ' ஒன்றை வெளியிட்டார். அதில், அவர் கூறியிருப்பதாவது: மகளுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளேன். மாப்பிள்ளை வீட்டாரும், என் மகளை பிடித்து இருப்பதாக சொல்லி விட்டனர்.
நாங்கள் குடும்பத்துடன் மாப்பிள்ளை வீடு பார்க்க செல்வதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தேன். உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்து விட்டேன்.கோவைக்கு பணியாற்ற செல்ல வேண்டும் என, இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் போஸ் கட்டாயப்படுத்துகிறார். மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். சுபகாரியமும் தடைபட்டு விட்டது. இவ்வாறு சந்தானராஜ் மிகவும் வருத்தப்பட்டு கூறியுள்ளார்.
![]()
|
இவருக்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேற்று எழுதியுள்ள கடிதம்: தங்களின் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற இருந்தது குறித்தும், அதில் பங்கேற்க தங்களுக்கு விடுப்பு மறுக்கப்பட்டது குறித்தும் கேள்விபட்டேன்; மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். இதுபோன்ற குடும்ப முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க, விடுப்பு வழங்க வேண்டும் என, உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
வரும் நாட்களில், தங்கள் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்த ஏதுவாக, போதுமான நாட்கள் விடுப்பு வழங்க, மாவட்ட எஸ்.பி.,க்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.