தேனி, -தேனி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாளர்கள் பற்றாக்குறையால் 11 இடங்களில் இரவு நேர சேவைப்பணிகள் பாதிக்கப்பட்டு நோயாளிகள் சிரமத்தில் தவிக்கின்றனர்.
மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் 24 வாகனங்கள் இயங்குகின்றன.இதில் டிரைவர்கள், அவசர மருத்துவ தொழில்நுட்ப உதவியாளர்கள் 132 பேர் பணிபுரிகின்றனர். கடந்த மார்ச் 25ல் 6 தொழில் நுட்ப உதவியாளர்கள், 3 டிரைவர்கள் என 9 பேர் மதுரைக்கு மாற்றுப்பணிக்கு சென்றனர். அவர்கள் தேனிக்கு திரும்புவதற்குள் மீண்டும் 5 டிரைவர், 10 தொழில் நுட்ப உதவியாளர்கள் என, 15 பேரை மதுரை, சென்னை, மயிலாடுதுரை, திருவாரூர் மாவட்டங்களுக்கு மாற்றுப்பணிக்கு சென்றனர். மதுரைக்கு சென்ற 8 ஊழியர்கள் திரும்பினர்.
ஆனால் 15 பேர் மீண்டும் தேனி மாவட்டத்திற்கு இதுவரை திரும்பவில்லை.11 இடங்களில் சேவை பாதிப்பு:இதனால் ஊழியர்களின் வார விடுமுறை நாட்களில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு பல்வேறு இடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரவில் வருஷநாடு, சிலமலை, தேவதானப்பட்டி, கம்பம், கடமலைக்குண்டு, கண்டமனுார், தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தேனி குழந்தைகள் நல சிறப்பு வாகனம், கம்பம் குழந்தைகள் வாகனம், தேவாரம், பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் இயங்குகிற 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 11 இடங்களில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. வாரவிடுமுறை நாட்களில் இச்சேவை பாதிப்பு தொடர்கிறது.
இதுகுறித்து கலெக்டர் முரளீதரனிடம் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில், தொழிலாளர் பற்றாக்குறை நீக்க நடவடிக்கை எடுக்க கோரி 2 முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.அன்புவடிவேல், சமூக ஆர்வலர், கூறியதாவது: ‛வருஷநாடு, கண்டமனுார், அகமலை, போடி பகுதியில் நெஞ்சுவலி, பாம்புக்கடி, பிரசவ வலி ஏற்பட்டு இரவில் அதிகளவில் பாதிக்கப்பட்டு மருத்துவ சேவைக்காக காத்திருப்பது தொடர்கிறது.இதே நிலை மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் உள்ளன. 108 ஆம்புலன்ஸ்சில் ஊழியர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்றார்.