ஆண்டிபட்டி-டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி ஜெ.ஜெ.நகர், சத்யாநகர், சீதாராம்தாஸ் நகர், காந்திநகர் பகுதியில் தெரு விளக்குபராமரிப்பில் மின்வாரியம் மெத்தனமாக செயல்படுவதால் பொதுமக்கள் பரிதவிக்கின்றனர். ஆண்டிபட்டி பேரூராட்சி ஒட்டியுள்ள இப்பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இப்பகுதியில் புதிய தெருவிளக்குகள் அமைக்கவும், பழுதான விளக்குகளை சீரமைக்க மக்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். ஊராட்சி நிர்வாகம் தெருவிளக்குகள் அமைக்கும் நடவடிக்கை மேற்கொண்டும் மின்வாரியத்தால் காலதாமதம் தொடர்கிறது. ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: இப்பகுதிகளில் புதிய தெரு விளக்குகள் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த தெருவிளக்குகள் அடிக்கடி பழுதாகிறது. இதுகுறித்து மின்வாரிய பணியாளரிடம் தகவல் தெரிவித்தால் உடனே சரி செய்வதில்லை. பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கின்றனர். தெருவிளக்கு பிரச்சனை குறித்து மாவட்ட கவுன்சிலர் பாண்டியன், ஊராட்சி தலைவர் வேல்மணி, துணைத்தலைவர் மீரா மற்றும் வார்டு உறுப்பினர்கள் உதவி செயற்பொறியாளர் ஜெயச்சந்திரனிடம் மனு அளித்து புதிய தெரு விளக்கு விரைவில் அமைக்கவும், பழுதான தெருவிளக்குகளை உடனுக்குடன் சரி செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.