கோவை : மத்திய அரசு நடத்தும் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க, கோவை மேயர் கல்பனா, டில்லி செல்கிறார். இதற்காக, நாளை நடத்த திட்டமிட்டிருந்த மாமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித்துறை அமைச்சகம் சார்பில், 'துாய்மை பாரதம் 2.0' திட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது. இதை பயன்படுத்தி, நகர்ப்புறங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த செயல்படுத்திய திட்டங்களை கண்காணித்து, தர வரிசைப்படுத்தி, விருது வழங்கி கவுரவிக்கிறது.
நடப்பாண்டு, 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளில், 75வது அமுத சுதந்திர திருவிழா நடத்தப்பட்டது.தமிழகத்தில், 'எனது குப்பை எனது பொறுப்பு'; 'துாய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம்' என்கிற தலைப்பில், சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.நாடு தழுவிய அளவில், துாய்மை பாரதம் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய உள்ளாட்சி அமைப்புகளை தேர்வு செய்துள்ள மத்திய அரசு, டில்லியில் இன்று (29ம் தேதி) முதல் அக்., 1 வரை விழா நடத்தி, விருது வழங்குகிறது.கோவை, திருப்பூர், ஆவடி ஆகிய மாநகராட்சி கமிஷனர்கள் மற்றும் மேயர்கள், திருச்சி, திருநெல்வேலி, காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர்கள் உள்ளிட்ட, 44 அதிகாரிகள் பங்கேற்க, தமிழக நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவிட்டிருக்கிறார்.இவ்விழாவில் பங்கேற்க, கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் மற்றும் மேயர் கல்பனா ஆகியோர் டில்லி செல்கின்றனர். இதன் காரணமாக, 30ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடத்த திட்டமிட்டிருந்த மாமன்ற கூட்டம், மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.