கோவை : தீபாவளி பண்டிகையையொட்டி, கோவை ஆவினில் 64 டன் அளவுக்கு பத்து வகையான புதிய வகை இனிப்புகளை தயாரித்து, குறைந்த விலையில் விற்பனை செய்ய, கோவை ஆவின் முடிவு செய்துள்ளது.கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய தீபாவளி பண்டிகைக்கும், 15 முதல் 20 டன் அளவே இனிப்புகளை தயாரித்து, விற்பனை செய்தது ஆவின்.ஆனால் இந்த ஆண்டு, முன் எப்போதும் இல்லாத அளவில் 64 டன் அளவிற்கு, பத்து வகையான இனிப்பு வகைகளை தயாரித்து, விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது
ஆவின் நிறுவனம்.இந்த தீபாவளிக்கு வழக்கமாக இருக்கும் இனிப்பு ரகங்களை காட்டிலும், புதுமையான இனிப்புகளை தயாரிக்கிறது. நட்ஸ் அல்வா, கோதி அல்வா, பால் அல்வா, காஜிகத்திலி, மைசூர்பா, கேரட் எசன்ஸ் மைசூர்பா, பால்கோவா, வெண்பால்திரட்டு ஆகிய புதிய இனிப்புகளை, சற்று வித்தியாசமாகவும் சுவையாகவும் தயாரித்து, விற்பனை செய்கிறது ஆவின்.தயாரிக்கப்பட்ட இனிப்பு களில் எளிதில் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்கவும், சுவை மாறாமல் இருக்கவும், நவீன முறையில் எம்.ஏ.டி., பேக்கிங் முறை பின்பற்றப்படுகிறது.அந்த முறையில் 70 சதவீதம் நைட்ரஜன், 30 சதவீதம் கார்பன் டை ஆக்சைடு சேர்த்து வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கும் வகையில் உட்புகுத்தி, உணவுத்தரக்கட்டுப்பாடு முறைப்படி பேக்கிங் செய்யப்படுகிறது.பால்கோவா ரூ.130க்கும், மைசூர்பா ரூ.140க்கும், கேரட் மைசூர்பா ரூ.160க்கும் காஜிகத்லி ரூ.190க்கும் கால் கிலோ அளவில், விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
134 ஆவின் பார்லர்கள், 750 ஏஜன்ட்கள் வாயிலாக விற்கவும், அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில், நேரடி ஆர்டர்கள் வாயிலாக சப்ளை செய்யவும் திட்டமிட்டுள்ளது.இது குறித்து, ஆவின் பொது மேலாளர் ராமநாதன் கூறியதாவது:வழக்கத்திற்கும் மாறாக இந்த ஆண்டு, 64 டன் எடையில் திட்டமிட்டு இனிப்புகளை தயாரிக்கிறோம். தயாரிப்பு பணி நாளை(இன்று) துவங்குகிறது.
தீபாவளி வரை பணிகள் தொடரும்.ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நிச்சயம் அரசு நிர்ணயித்துள்ள இலக்கை எட்டுவோம். விலை குறைவாக இருப்பதாலும், சுவை நிறைவாக இருப்பதாலும், ஆவின் இனிப்புகளுக்கு மக்கள் மத்தியில், எப்போதும் நல்ல வரவேற்பு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.