சென்னை : இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்றில், 30 ஆயிரம் பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தற்காலிக ஒதுக்கீட்டை இன்றைக்குள் உறுதிப்படுத்த, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' பொது கவுன்சிலிங், கடந்த 10ம் தேதி துவங்கியது. முதல் சுற்று ஒதுக்கீடுகள், 25ம் தேதி நிறைவுற்றன. இதில், 9,500 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.இரண்டாம் சுற்று ஒதுக்கீடுக்கு ஆன்லைன் விருப்பப் பதிவு, 25ல் துவங்கி நேற்று முன்தினம் முடிந்தது. இதில், 31 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.
மாணவர்களின் விருப்பப் பதிவு மற்றும் தரவரிசை அடிப்படையில், தற்காலிகமாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.இதற்கான ஆணைகள் மாணவர்களுக்கு நேற்று ஆன்லைன் வழியே வழங்கப்பட்டன. இந்த ஒதுக்கீட்டை இன்று மாலை 5:00 மணிக்குள், மாணவர்கள் உறுதிப்படுத்த வேண்டும் அல்லது அடுத்த சுற்றுக்கு செல்வது குறித்து குறிப்பிட வேண்டும் என, இன்ஜினியரிங் கவுன்சிலிங் குழு அறிவித்துள்ளது.
கவுன்சிலிங் முதல் சுற்றில், பொதுப் பிரிவில் 568 பேர்; அரசின் 7.5 சதவீத ஒதுக்கீட்டு பிரிவில் 28 பேர், தற்காலிக ஒதுக்கீட்டை உறுதி செய்யாமல் இடங்களை தவற விட்டனர்.எனவே, இரண்டாம் சுற்றில் ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், ஆன்லைன் வழி உறுதிப்படுத்தலை தவற விடாமல் கவனமாக செயல்பட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் விபரங்களை, www.tneaonline.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.