சென்னை : ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு டாக்டர்கள் குடும்பத்தினருடன், சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசாணை 354ன்படி ஊதிய உயர்வு வழங்க கோரி, அரசு டாக்டர்கள், ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 118 டாக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டாலும், டாக்டர்கள் அவ்வப்போது தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அரசு டாக்டர்களுக்கான சட்ட பேராட்டக்குழு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், 500க்கும் மேற்பட்ட டாக்டர்கள், குடும்பத்தினருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்குழு தலைவர் பெருமாள்பிள்ளை கூறியதாவது:
கடந்த 2019ல் நடந்த உண்ணாவிரதத்தின்போது, முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆதரவு தந்தார்; 'தந்தையின் ஆணையை நிறைவேற்றுவது தான் மகனின் கடமை' என தெரிவித்தார். ஆட்சிக்கு வந்தபின், அரசாணை 354 அமல்படுத்த மாட்டோம்; சிறுதொகையை மட்டும் தருகிறோம் என்கின்றனர்.அந்த சிறு தொகையும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்களுக்கு வழங்கப்படாது என்கின்றனர். அதைத் தவிர்த்து, அரசாணை 354ன்படி, டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உண்ணாவிரதம் இருந்த டாக்டர்களை சந்தித்து, பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர்.