மதுரை : தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டம் சார்ந்த உறுப்பினர் நியமிக்கப்படும் வரை, கட்டண உயர்வு மனுக்கள் மீதான இறுதி உத்தரவை பிறப்பிக்க தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு ரத்து செய்தது; சட்டம் சார்ந்த உறுப்பினரை 3 மாதங்களில் நியமிக்க உத்தரவிட்டது.
சில தொழிற்சாலை நிர்வாகங்கள் தரப்பில், உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது:
தமிழகத்தில் மின் கட்டண உயர்விற்கு அனுமதி கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் வாரியம் மனு செய்தது.ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.இதில் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு உறுப்பினர், சட்டம் சார்ந்த ஒரு உறுப்பினர் இடம் பெற வேண்டும். சட்டம் சார்ந்த உறுப்பினரை நியமிக்கவில்லை. அப்பதவியை நிரப்பும்வரை ஆணையம் கட்டணம் தொடர்பாக எவ்வித முடிவும் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டிருந்தனர்.
அந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'சட்டம் சார்ந்த உறுப்பினர் நியமிக்கப்படும் வரை, கட்டண மனுக்கள் மீதான இறுதி உத்தரவை பிறப்பிக்க ஆணையத்திற்கு தடை விதிக்கப்படுகிறது' என உத்தரவிட்டார்.இதை எதிர்த்து தமிழக அரசு மற்றும் மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் தரப்பு மேல்முறையீடு செய்தது.
கடந்த 1ல் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.அப்போது அரசுத் தரப்பில் கூறப்பட்டதாவது:
ஆணையத்தில் சட்டம் சார்ந்த உறுப்பினர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பொதுநலன் சார்ந்த இவ்வழக்கை தனி நீதிபதி விசாரிக்க வேண்டிய அவசியம் எழவில்லை. அமர்வு விசாரித்திருக்க வேண்டும். தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, நீதிபதிகள் அப்போது பிறப்பித்த உத்தரவில், 'சட்டம் சார்ந்த உறுப்பினர் நியமிக்கப்படும் வரை, கட்டண மனுக்கள் மீதான இறுதி உத்தரவை பிறப்பிக்க ஆணையத்திற்கு தடை விதிக்கப்படுகிறது என்ற தனி நீதிபதி உத்தரவின் அக்குறிப்பிட்ட விஷயத்திற்கு மட்டும் இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது' என்றனர்.வழக்கை, இறுதி உத்தரவிற்காக ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எஸ்.ஸ்ரீமதி அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில், 'அரசின் மேல்முறையீட்டு மனு அனுமதிக்கப்படுகிறது. தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டம் சார்ந்த உறுப்பினரை மூன்று மாதங்களில் நியமிக்க வேண்டும்' என்றனர்.இதற்கிடையே, தமிழகத்தில் மின் கட்டண உயர்வு செப்.,10 முதல் அமலாகியுள்ளது.