தமிழகத்தில் வனப்பகுதிக்குள் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென்று வனத்துறைக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், கோவையில் மாநகரின் மையப்பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான வளாகத்தில் பல ஏக்கர் பரப்பில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து கிடக்கின்றன.
தமிழகத்தில் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென்று, ம.தி.மு.க.,பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலரும் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட், அவற்றை அகற்றுமாறு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, வனத்துறை, நீர் வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறைகள் சார்பில், ஐகோர்ட்டில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அந்த அறிக்கைகளில், வனப்பகுதியிலும், நீர் நிலைகளிலும், கிராமப்பகுதிகளிலும் எவ்வளவு பரப்பில் சீமைக்கருவேல மரங்கள் இருந்தன; எவ்வளவு அகற்றப்பட்டன என்பது குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

வனத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், இதுவரை 200 எக்டேர் (500 ஏக்கர்) பரப்பில் சீமைக்கருவேலம் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அமைந்துள்ள ஆனைமலை மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் தான், இந்த சீமைக்கருவேலங்கள் அகற்றப்பட்டுள்ளதாக, வனத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் மற்ற வனப்பகுதிகளில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.ஆனால், கோவை வனக்கல்லுாரி வளாகத்திலேயே, பல ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள், பல ஆண்டுகளாக அடர்ந்து வளர்ந்து காடாக காட்சியளிக்கின்றன.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள வளாகம், 164 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.வனம் சார்ந்த ஒரு சூழலை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்துடனே, நகருக்கு நடுவில் அக்காலத்திலேயே இந்த வளாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒட்டு மொத்தமாக இந்த வளாகத்தை நிர்வகிக்கும் பொறுப்பு, யாரிடமும் இல்லை. பராமரிப்பில்லாத பகுதிகளில், பல ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.
காட்டுக்குள் இருக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்றி விட்டதாக ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யும் வனத்துறை, இந்த வளாகத்திலுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றாமல் வேடிக்கை பார்த்து வருகிறது. ஐகோர்ட் பலமுறை உத்தரவிட்ட பின்னும், பெயரளவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தான், கடந்த மூன்று நாட்களுக்கு முன், இதே வழக்கில், புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ள ஐகோர்ட், 'மற்ற வனப்பகுதிகளிலும் உள்ள சீமைக்கருவேலங்களை அகற்றி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று வனத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து கருத்து கேட்க, கோவை மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்ரமணியத்திடம் தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை எடுக்கவில்லை. கோவை டி.எப்.ஓ., அசோக்குமாரிடம் கேட்டபோது, ''படிப்படியாக அந்த வளாகத்தில் கருவேல மரங்கள் அகற்றப்படுகின்றன!'' என்றார்.
கோவை கலெக்டர் சமீரன் கூறுகையில், ''வனத்துறை அதிகாரிகளிடம் பேசி, அங்குள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, நம் மண்ணின் மரங்களை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்றார்.வனத்துறை வளாகத்திலேயே உள்ள சீமைக்கருவேல மரங்களை முதலில் அகற்றுவது, தமிழக அரசின் தார்மீகக்கடமை!
-நமது சிறப்பு நிருபர்-