புதுடில்லி : கிரிமினல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்ககோரிய மனு மீது மத்திய அரசு, தேர்தல் கமிஷன் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பா.ஜ.,வை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய், உச்ச நீதி மன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், கிரிமினல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரினார். இந்த விவகாரம் தொடர்பாக சட்ட கமிஷன் பரிந்துரைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் மீது மத்திய அரசும், தேர்தல் கமிஷனும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு மீது மத்திய சட்டத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம், தேர்தல் கமிஷன் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.