சென்னை : சென்னையில் நேற்று நடந்த மின் வாரிய இயக்குனர்கள் குழு கூட்டத்தில், ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்புதல் அளித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
தமிழக மின் வாரியத்தில் 15 தொழிற்சங்கங்களின் ஊழியர்கள் ஒன்றிணைந்து, தங்களுக்கு கிடைக்கும் சலுகைகளை ரத்து செய்யும் வாரிய செயல்முறை ஆணை - 2ஐ ரத்து செய்வது; 'அவுட்சோர்சிங்' முறையை கைவிடுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இம்மாதம் 26ம் தேதி காலை முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அன்றிரவு, சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் உயரதிகாரிகள், கூட்டுக்குழு நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர்.
அப்போது, 'ஆணையில் உள்ள ஊழியர்களை பாதிக்கும் ஷரத்துகளை ரத்து செய்வது தொடர்பாக, 28ம் தேதி நடக்க உள்ள வாரிய இயக்குனர்கள் குழு கூட்டத்தில், கருத்துரு சமர்ப்பித்து தீர்வு காண்பது' என, உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, இரவு போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
மின் வாரிய இயக்குனர்கள் குழுவில் நிதி, தொழில், எரிசக்தி துறைகளின் செயலர்கள், மின் வாரிய தலைவர் மற்றும் அதன் இயக்குனர்கள் இடம் பெற்றுள்ளனர். இயக்குனர்கள் குழு கூட்டம், நேற்று மாலை மின் வாரிய அலுவலகத்தில் நடந்தது. அதில், மின் வாரிய செயல்முறை ஆணையில், ஊழியர்களை பாதிக்கக் கூடிய ஷரத்துக்களை நீக்க, ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.