சில்லு மாடல் வண்டி
சில்லு தயாரிப்பாளரான என்விடியா, 'டிரைவ் தோர்' என்ற வாகனங்களுக்கான சில்லினை அறிவித்திருக்கிறது. 'பார்க்கிங்' செய்வது, 'ஏ.சி.,' முதல் வீடியோ வரை கையாள்வது, கேமராக்கள், வாகன ஓட்டியை கண்காணிப்பது, நெடுஞ்சாலையில் வாகனத்தை செலுத்த உதவுவது என்று பல வேலைகளைச் செய்யும் சில்லுகளை ஒருங்கிணைத்திருக்கிறது டிரைவ் தோர். 2025ல் சந்தைக்கு வரும் இந்த சில்லில், 77 பில்லியன் டிரான்சிஸ்டர்கள் இருக்கும். இது, 2,000 டெராபிளாப்ஸ் வேகத்தில் இயங்கும்.
கொசுவை ஈர்க்கும் வாடை
மலேரியா, டெங்கு போன்ற பல நோய்களை கொடுக்கும் கொசுக்கள், யாரைக் கடிப்பது என்று எப்படி தீர்மானிக்கின்றன? மனித தோலில் வெளிப்படும் வேதிப்பொருட்களின் நெடியால் ஈர்க்கப்பட்டுத்தான் நோய் கொடுக்கும் கொசுக்கள் வருகின்றன. அந்த வேதிப் பொருட்களின் கலவை எது என்பதை அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கார்பன் - டை ஆக்சைடு, லாக்டிக் அமிலம், கீட்டோகுளுடாரிக் அமிலம் போன்ற வேதிப் பொருட்களின் கலவை தான் கொசுக்களை கடிக்க வரும்படி ஈர்க்கின்றன.
அழியாக் குரலோன்
ஸ்டார் வார்ஸ் பட வரிசையின் மெயின் வில்லன் 'டார்த் வேடர்!' கறுப்பு முக கவசம் அணிந்த இந்த பாத்திரத்தின் கரகர குரலுக்கு சொந்தக்காரர், பழம்பெரும் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ். இவர், அண்மையில் தனது குரலை, டிஸ்னி பிளஸ் சேனலுக்கு தானமாகக் கொடுத்துவிட்டார். அதாவது, அவரது குரலை 'ரீஸ்பீச்சர்' என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மூலம் மறு உருவாக்கம் செய்து, டிஸ்னிகாரர்கள் எந்த திரைப் படம், டிவி சீரியல் அல்லது வெப் சீரீசுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
செவ்வாயில் வெள்ளம்?
செவ்வாய் கிரகத்தின் வட துருவத்தில், சீனாவின் 'ஷுரோங்' என்ற ஆய்வு வாகனம், தரையை ரேடார் மூலம் ஆராய்கிறது. தரைக்கடியில் 100 மீட்டர் ஆழம் வரை படம் பிடித்து ஷூரோங் அனுப்பியுள்ளது. அதன்படி, செவ்வாயில் 3 முதல் 1.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன், இரண்டு பெரிய வெள்ளங்கள் ஏற்பட்டிருக்கலாம் என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், தரை ரேடார் படத்தை வைத்து இதுபோன்ற தகவல்களை உறுதிப்படுத்த முடியாது என சில விஞ்ஞானிகள் விமர்சித்து உள்ளனர்.
மனித மூளையின் வரைபடம்
மனிதனின் மரபணுக்களை வகைப் படுத்தி, வரிசைப்படுத்தியது, ஜீனோம் புராஜக்ட். அதேபோல இப்போது மனித மூளையில் உள்ள 200 பில்லியன் செல்களையும் வகைப்படுத்தி, அவற்றின் வடிவமைப்பு, இருப்பிடம், மின் செயல்பாடு, தனித்திறன் போன்றவற்றை ஆராயவிருக்கிறது 'தி பிரெயின் இனிஷியேட்டிவ்!' அமெரிக்காவின் தேசிய உடல்நல நிலையம், மனித மூளையின் துல்லியமான வரைபடத்தை உருவாக்குவதற்காக, அடுத்து வரும் 5 ஆண்டுகளில் 500 மில்லியன் டாலர்களை செலவழிக்க உள்ளது.